துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கும் நினைவுச்சின்னம் - உறவினர்கள் கோரிக்கை!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் உடலும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. உயிரிழந்தவர்களின் நினைவாக நினைவுச்சின்னம் எழுப்ப வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

உயிரிழந்த 13 பேர்

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி, 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 99 நாள்கள் தொடர் போராட்டம் நடத்திவந்தனர். இந்த நாள்களில், அரசுத் தரப்பில் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. ஆலைக்கு எதிரான மக்களின் எதிர்ப்பை அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லும் விதமாக, ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்று  முற்றுகையிட்டு, ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என அரசு உறுதியளிக்கும் வரை ஆட்சியர் அலுவலகத்தை விட்டு நகரப்போவதில்லை என அறிவித்தனர். இந்தப் பேரணியில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்துகொண்டனர். 

போலீஸாருக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட பேச்சுவார்த்தையின்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவால் கல்வீச்சு சம்பவம் தொடங்கியது. பைக், வாகனங்கள் எரிக்கப்பட்டன. இந்தக் கலவரம், துப்பாக்கிச் சூடு வரை சென்றது. இதில், கந்தையா, சண்முகம், கார்த்திக், கிளாஸ்டன், ரஞ்சித் குமார், செல்வசேகர், தமிழரசன், அந்தோணி செல்வராஜ், மணிராஜ், காளியப்பன், ஜெயராமன், ஸ்னோலின், ஜான்சி ஆகிய 13 பேர்,  நெற்றி, கழுத்து, தலை, மார்பு, வயிறு, வாய்  ஆகிய பகுதிகளில் குண்டு துளைக்கப்பட்டு உயிரிழந்தனர். அதன் பின்னரும், தொடர்ந்து 3 நாள்கள் ஆங்காங்கே கல்வீச்சு, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவமும், தடியடியும், வீடுகளில் புகுந்து கைதுசெய்யும் சம்பவமும் நடந்தன. 3 நாள்கள் தொடர்ந்து கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்துகளும் இயக்கப்படவில்லை. பின், மெள்ள மெள்ள கடைகள் திறக்கப்பட்டன. பேருந்துகளும் இயக்கப்பட்டன. மக்களும் வெளியே தலைகாட்டினர். 

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து 15 நாள்களுக்கு மேல் ஆகியும், நகர் முழுவதும் போடப்பட்ட போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த மே 31-ம் தேதி  சிறப்பு அனுமதியுடன் தொடர்ச்சியாக மறு உடற்கூறாய்வு செய்யப்பட்டு சண்முகம், செல்வசேகர் மற்றும் கார்த்திக் ஆகியோரின் உடல்களும், ஜூன் 1-ம் தேதி கந்தையா மற்றும் காளியப்பன் ஆகியோரின் உடல்களும், 2-ம் தேதி தமிழரசனின் உடலும், 3-ம் தேதி ஸ்னோலினின் உடலும் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன. இதில், மீதமுள்ள பதப்படுத்தி வைக்கப்பட்ட ரஞ்சித்குமார், மணிராஜ், கிளாஸ்டன், ஜான்சி மற்றும்  ஜெயராமன் ஆகிய 5 பேரின் உடல்கள் நேற்றும், அந்தோணி செல்வராஜின் உடல் இன்று காலையும் உடற்கூராய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. 

இதற்கிடையே, ``ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். பலத்த பாதுகாப்புடன் எந்தப் பிரச்னையும்  இல்லாமல் 13 பேரின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டுவிட்டன.  இதே பாதுகாப்பையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் முன்பே எடுத்திருந்தால், கலவரம் ஏற்பட்டிருக்காது, துப்பாக்கிச் சூடும் நடந்திருக்காது. அமைச்சரவையில் ஆலையை மூடிட தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.  அப்போதுதான், இவர்களின் இறப்பு அர்த்தமுள்ளதாகும். வீரமரணம் அடைந்த 13 பேரின் நினைவாக நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும்" என இறந்தவர்களின் குடும்பத்தினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!