வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (07/06/2018)

கடைசி தொடர்பு:13:03 (04/07/2018)

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் கண்டறியும் நவீன கருவி!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மார்பகப் புற்றுநோய் பிரச்னையைக் கண்டறியும் 3-டி மேமோகிராம் கருவி செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள இக்கருவியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று முறைப்படி தொடங்கிவைத்தார்.

மார்பகப் புற்றுநோய் கருவி


இக்கருவியின் பெயர், இலுமினா 360 (illumina 360°). மத்திய அரசின் பயோடெக்னாலஜி துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கருவி மூலம், பாதிப்பின் தொடக்கத்திலேயே மார்பகத் திசுக்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைவைத்து நோயைக் கண்டறியலாம். இதுவரை செயல்பாட்டில் இருந்த மேமோகிராம் கருவி மூலம், ஒரு சென்டிமீட்டர் வரை வளர்ந்த புற்றுநோய்க் கட்டியை மட்டுமே கண்டறிய முடியும். இதில் சோதனைக்குட்படும் பெண்கள், மார்பகத்தை வெளிப்படுத்தவேண்டிய அவசியமில்லை. ரேடியேஷன் பாதிப்புகளோ, வலியோ எந்த விதத்திலும் ஏற்படாது.

இந்த இயந்திரத்தைத் தொடங்கிவைக்க, அமைச்சர் விஜயபாஸ்கருடன் க்யூரா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எம்.பாலா, மத்திய பயோடெக்னாலஜி தொழிற்சாலை ஆராய்ச்சி (BIRAC) நிர்வாக இயக்குநர் டாக்டர் ரேணு ஸ்வரூப், கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி முதல்வர், கதிரியக்கவியல் துறை தலைவர் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். நேற்று நடந்த தொடக்கவிழாவில், 'இந்தச் சோதனையை தனியார் மருத்துவமனையில் செய்துகொள்ள ஒரு லட்ச ரூபாய் செலவாகும். தற்போது அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்யப்படும்' என்று அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்லியிருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க