குடியரசுத்தலைவர் கோயிலுக்குள் நுழைவதைத் தடுத்த விவகாரம்! - திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்தியாவின் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், ராஜஸ்தான் மாநில கோயிலுக்குள் செல்லும்போது தடுக்கப்பட்டதைக் கண்டித்து, திராவிடர் கழகம் சார்பில் தமிழகம் தழுவிய கண்டன  ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.

திராவிடர் கழகம்

அதன் ஒருபகுதியாக, இன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் கண்டன முழக்கங்களை எழுப்பியவர்கள், ``ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அஜ்மீர் மாவட்டம் புஷ்கரில் உள்ள பிரம்மா கோயிலுக்குள், இந்திய குடியரசுத்தலைவர் செல்வதைத் தடுத்திருக்கும் சம்பவம், இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட பெரும் சவாலாகவே பார்க்கப்படுகிறது. கோயிலில் அர்ச்சகர் பதவி என்பது இந்தியாவின் ஜனாதிபதி பதவியைவிட உயர்வானது என்பதை இந்தச் சம்பவத்தின் மூலம் அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். பிறவி பேதத்தை நிலைநாட்டும் இதுபோன்ற தவறான நிகழ்வுகளைக் களைந்தெடுக்க, தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த போராட்டமான "அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும்" என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 

இந்திய அரசியல் சட்டத்தில் தீண்டாமை  ஒழிக்கப்பட்டது என்பதற்குப் பதிலாக, சாதி ஒழிக்கப்பட்டது என்ற சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். இல்லையென்றால், வருணாசிரம முறையால் இந்திய நாடு வன்முறைக்காடாகவேதான் இருக்குமே தவிர, ஒருபோதும் இது சுதந்திர நாடாக இருக்கமுடியாது. சாதியையும், தீண்டாமையையும் பேணிப் பாதுகாக்கின்ற அரசாக மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. வருணாசிரமத்தையும், மத்திய பா.ஜ.க அரசையும் விரட்டியடிக்க பொதுமக்கள் விழிப்பு உணர்வுள்ள பல போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்" என்றனர்.

 குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்தை கோயிலுக்குள் செல்லவிடாமல் அவமதித்த அர்ச்சகரைக் கைதுசெய்ய வேண்டும். 'அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை' என்ற சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி தொடர் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!