வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (07/06/2018)

கடைசி தொடர்பு:18:10 (07/06/2018)

'அ.தி.மு.க-வை புகழத் தயார்!'- அவையை அதிரவைத்த துரைமுருகன்

சட்டப்பேரவையில் எதிர்கட்சிதுணைத்தலைவர் துரைமுருகன் அம்மா அரசு என புகழ்ந்து பேசியது அதிமுக உறுப்பினர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது

சட்டப்பேரவையில், எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், அம்மா அரசு எனப் புகழ்ந்துபேசியது அ.தி.மு.க உறுப்பினர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

துரைமுருகன்

 

சட்டப்பேரவை கூட்டத்தொடர், கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில், இன்று தொழில்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. கேள்வி நேரத்தின்போது பேசிய கே.வி.குப்பம் அ.தி.மு.க எம்.எல்.ஏ., லோகனாதன், தனது தொகுதியைப் புதிய வட்டமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஏற்கெனவே 72 வட்டங்களை அம்மாவின் அரசு உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தார். இந்த விவாதத்தின்போது குறுக்கிட்ட எதிர்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், 73-வது வட்டத்தையும் அம்மாவின்  அரசு உருவாக்கித் தரவேண்டும் என வலியுறுத்தினார். அப்போது, பேரவையிலிருந்த ஓ.பி.எஸ், துரைமுருகனுக்கு நன்றி தெரிவித்தார். இதையடுத்து, வட்டத்தை உருவாக்கித் தந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் 'புகழத் தயார்' என துரைமுருகன் கூறியது, அ.தி.மு.க உறுப்பினர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பேசிய ஓ.பி.எஸ், துரைமுருகன் என்றும் 16வயது போல, இளமையுடன் காட்சியளிப்பதாகக் கூறியவுடன் அவையில் சிரிப்பலை எழுந்தது. இதையடுத்து நடந்த விவாதத்தில் பேசிய தி.மு.க உறுப்பினர் ராஜா, அமைச்சருக்கு 'ஈ.வெ.கி-க்கள்' திட்டம் பற்றித் தெரியுமா என கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், 'தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்பதுபோல தி.மு.க உறுப்பினர்கள் பேசக்கூடாது' எனவும்; அமைச்சர்கள் துறை சார்ந்த தகவல்களைத் தெரிந்துவைத்துக்கொண்டுதான் உள்ளனர் எனவும் கோபமாகப் பதிலளித்தார்.