வெளியிடப்பட்ட நேரம்: 18:55 (07/06/2018)

கடைசி தொடர்பு:18:55 (07/06/2018)

ஒரே நாளில் இரண்டு ஷோ! - 'காலா'வுக்காக சென்னை வந்த ஜப்பான் ரசிகர்

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ரஜினி ரசிகர் சென்னையில் படம் பார்த்தது, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ரஜினி ரசிகர், சென்னையில் படம் பார்த்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.

காலா

 

இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவான காலா திரைப்படம், இன்று உலகம் முழுவதும் வெளியானது. ரஜினிகாந்த்தின் அரசியல் அறிவிப்பிற்குப் பின் வெளியாகும் படம் என்பதால், 'காலா' படம் அனைவராலும் உற்றுநோக்கப்பட்டது. மேலும், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படத்தைப் பார்க்க அதிகாலை முதலே திரையரங்கு முன்பு ரசிகர்கள் குவிந்தனர். ஆட்டம் , பாட்டத்துடன், வெடிவெடித்துக் கொண்டாடினர்.  

இதனிடையே, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர், 'காலா' படம் பார்க்க வந்ததை ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் எசுதா. நடிகர் ரஜினிகாந்த்தின்  தீவிர ரசிகரான இவர், 'காலா' படம் பார்ப்பதற்காக மூன்று நாள்களுக்கு முன்பே சென்னை வந்தடைந்தார். பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த அவர், தன் குடும்பத்துடன் சென்று காசி திரையரங்கம், மற்றும் ரோகினி திரையரங்குகளில் ஒரே நாளில் இரண்டு காட்சிகள் பார்த்து ரசித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசும்போது,` நான் ரஜினியின் தீவிர ரசிகன்; ஜப்பானில் ரஜினி படங்களைப் பார்த்திருக்கிறேன். எங்கள் நாட்டில் ரஜினிகாந்த் படத்துக்கு நல்ல வரவேற்புள்ளது. 'காலா' படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.  2 காட்சிகளையும் சென்னையில் பார்த்தது, கூடுதல் மகிழ்ச்சி’ இவ்வாறு எசுதா தெரிவித்துள்ளார். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் சென்னையில் படம்பார்த்தது, ரஜினி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.