வெளியிடப்பட்ட நேரம்: 18:24 (07/06/2018)

கடைசி தொடர்பு:22:31 (07/06/2018)

`கேட்டது லிஃப்ட்... கிடைத்தது அரிவாள் வெட்டு..!’ - இது சிவகங்கை அவலம்

சிவகங்கையில், சாதி தெரியாமல் லிஃப்ட் கொடுத்துவிட்டு, சாதி தெரிந்ததும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  

சந்தனம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய 3 பேர் கடந்த மாதம் 28-ம் தேதி வெட்டி படுகொலைசெய்யப்பட்டனர். `கச்சநத்தம் படுகொலை, சாதி வெறியர்களால் நிகழ்த்தப்பட்டது’  என அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம் சுமத்திவருகின்றனர். இந்தச் சம்பவத்தில், பரபரப்பு ஓய்வதற்குள் சாதியின் பெயரில் மற்றொரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தச் சம்பவத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த எவிடன்ஸ் அமைப்பின் இயக்குநர் கதிர் பகிர்ந்துள்ள விவரங்கள் பின் வருமாறு...

`சிவகங்கை மாவட்டம், ஏனாதிகோட்டை கிராமத்தில் வசித்துவரும் பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த சந்தனம் (47) என்பவர், திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக திருப்புவனம் வந்துள்ளார். திருமணம் முடிந்து 03.06.2018 அன்று இரவு, சுமார் 10.00 மணியளவில் தனது ஊருக்குச் செல்ல பேருந்து நிலையம் வந்துள்ளார். உரிய பேருந்து கிடைக்காத காரணத்தால், திருப்புவனம் அருகில் உள்ள தன் தங்கை வீடான பிரமனூர் கிராமத்துக்குச் செல்ல நடந்துசென்றிருக்கிறார். இடையில், 4 பேர் கொண்ட கும்பல் இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்துள்ளனர். அவர்களிடம் சந்தனம், என்னை பிரமனூர் கிராமத்தில் இறக்கிவிட முடியுமா என்று கேட்டுள்ளார். அவர்களும் வாகனத்தில் ஏற்ற சம்மதித்துள்ளனர். சற்று தூரம் சென்றவுடன் அந்த நபர்கள், உங்கள் பேர் என்ன... எந்த கிராமம்... என்று கேட்டுள்ளனர். அதற்கு உரிய பதிலைக் கூறியிருக்கிறார் சந்தனம். நீங்க என்ன ஆளு... என்று கேட்க, நான் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவன் என்று கூறியிருக்கிறார். இதை முதலிலேயே சொல்ல வேண்டாமா, வண்டியை விட்டு இறங்குடா என்று கூறி சாதி ரீதியாக இழிவாகப்பேசி அவமானப்படுத்தியுள்ளனர். வயசுக்கு மரியாதை கொடுங்க, எதற்கு சாதிரீதியாகப் பேசுகிறீர்கள் என்று கேட்டதற்கு, அந்த கும்பல் சந்தனத்தின் கன்னத்தில் அறைந்துள்ளனர். அவரது சட்டையைப் பிடித்துத் தாக்கியுள்ளனர். வலி தாங்க முடியாமல் காப்பாற்றுங்கள் என்று சந்தனம் குரல் கொடுத்திருக்கிறார். அந்தக் கும்பலில் இருந்த ஒருவன், கத்தியால் சந்தனத்தின் பின் தலையில் வெட்டியுள்ளான். நெற்றியிலும் அரிவாள் வெட்டு காயம், இரண்டு கைகளிலும் கத்திக்குத்து. ரத்தம் வழிந்த நிலையில் மயக்கமுற்று கிடந்திருக்கிறார் சந்தனம்.

மறுநாள், சந்தனத்தை திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். எம்எல்சி வழக்காகப் பதிவுசெய்யப்பட்டும், முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்படவில்லை. எவிடன்ஸ் அமைப்பின் உண்மையறியும் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்றனர். மானாமதுரை டிஎஸ்பி., எவிடன்ஸ் குழுவினரை சந்திக்க வந்திருந்தார். அவரிடத்தில் நடந்த விவரத்தைக் கூறியதன் அடிப்படையில், உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருப்புவனம் காவல்நிலையத்தில் குற்றஎண்.183/2018 பிரிவுகள் 294(b), 324, 506(2) இ.த.ச. மற்றும் பட்டியல் இன சாதியினர், பட்டியல் இனப் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2015 பிரிவுகள் 3(1)(r), 3(1)(s) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் தேடப்பட்டுவருகின்றனர்.

சந்தனம்
 

கச்சநத்தம் பகுதியில் கொடூரமான படுகொலைகள் நடந்தும், சாதி வெறியர்கள் துணிச்சலுடன் நடமாடிவருவது கடும் கண்டனத்திற்குரியது. ஆகவே, உடனடியாக சிவகங்கைப் பகுதியை வன்கொடுமை மாவட்டமாக அறிவித்து, சிறப்பு சாதி வன்கொடுமை தடுப்பு போலீஸ் பிரிவை உருவாக்க வேண்டும். நான்கு குற்றவாளிகளும் உடனடியாகக் கைதுசெய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட சந்தனம் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணமும் உயர்தர மருத்துவ சிகிச்சையும் கொடுக்கப்பட வேண்டும்”  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க