சமூக விரோதிகள் யார்…  திருச்சியைக் கலங்கடிக்கும் ரஜினியின் 'காலா' போஸ்டர்கள்!

இன்று வெளியாகியுள்ள ரஜினியின் 'காலா' திரைப்படம், தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக திரையிடப்பட்டுள்ளது.  ரஜினியின் அரசியல் என்ட்ரி குறித்த பரபரப்புகளுக்கு இடையே வெளியாகியுள்ள இந்தத் திரைப்படத்துக்கு பலவிதங்களில் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த ரஜினி, அதன்பிறகு பேசிய சமூக விரோதிகள் குறித்த பேச்சு பெரும் பரபரப்புக்குள்ளானது. இதனாலும்' காலா' திரைப்படத்துக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

 காலா போஸ்டர்கள்இந்நிலையில், திருச்சியில் 'காலா' திரைப்படத்தைப் பார்க்க, காலையில் திருச்சி சோனா மீனா திரையரங்கத்துக்கு முன்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளான கலீல்ராஜு, ராயல்ராஜு, சேகர், செந்தில், பாஸ்கர் ஆகியோர் சகிதமாக ஏராளமாக திரண்டு வந்த ரஜினி ரசிகர்கள், பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.  அடுத்து, திரையரங்கத்துக்குள் ஊனமுற்ற பெண்மனி ஒருவருக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கப்பட்டது. அதேபோல, தட்டுகளில் பூ கொண்டுவந்த பெண்கள், ரஜினியின் கட் அவுட்டுக்கு தூவி வணங்கிவிட்டுச் சென்றனர்.  ரஜினிதியேட்டருக்குள் சென்ற ரஜினி ரசிகர்கள், ரஜினி வரும் காட்சிகளில் அதகளப்படுத்தினர்.

இது இப்படியென்றால், திருச்சி முழுக்க காலா வருகைக்காக ஒட்டப்பட்ட போஸ்டர்களில் அனல்பறக்கும் வசனங்களை அச்சிட்டு பரபரப்பை உண்டாக்கியுள்ளனர்.

`அதிகாரம், பதவி, அந்தஸ்து இருக்கின்ற அரசியல் திமிருல சில சமூக விரோத சக்தியாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை',  `எனக்குள் தூங்கிட்டு இருந்த சிங்கத்த தட்டி எழுப்பிட்டீங்க', `இந்த நாளை உன் காலண்டர்ல குறிச்சி வச்சுக்கோ', `சமூக விரோதச் செயல்பாடுகளில் ஈடுபடுவோரை தோல் உறித்துக்காட்ட புறப்பட்டுவிட்டார் காலா' எனும் வசனத்தை போட்டபடி தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டங்கள் அடங்கிய போஸ்டரும், `என்றும் எங்கள் மக்கள் தலைவனுக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டை காத்திருக்கிறது', `யார் சமூக விரோதி... உண்மை ஒரு நாள் வெல்லும் அன்று உலகம் உன்பெயர் சொல்லும்'  'ஊரே போற்றும் நாளைய முதல்வர் நீயே' உள்ளிட்ட அனல்பறக்கும் வசனங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

காலா திரைப்படம் மட்டுமல்லாமல், இந்தப் போஸ்டர்களும் திருச்சியில் அனல்பறக்கவைக்கிறது.   

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!