வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (07/06/2018)

கடைசி தொடர்பு:18:36 (08/06/2018)

`ஐந்து நிமிடத்தில் அக்கவுன்ட்டில் இருந்த ரூ.50,000 அபேஸ்' - கோவைவாசிகளைப் பதறவைத்த நூதன திருட்டு!

பாலமுருகன்

நாம் எவ்வளவு ஸ்மார்ட்டாக இருக்கிறோமோ, திருடர்கள் அதைவிட ஒருபடி மேலே இருப்பார்கள் என்பதை சமீபத்தில் கோவையில் நடந்த கொள்ளைச் சம்பவம் நிரூபித்துள்ளது. கோவை வரதராஜபுரம் பகுதியில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் கடந்த 20-ம் தேதி, பணம் எடுத்தவர்களில் பெரும்பாலோனோர் கணக்கிலிருந்து திருட்டு நடந்துள்ளது, வங்கி வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

கோவையில், பத்துக்கும் மேற்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் இருந்த பணம், நேற்று காலை கொஞ்சம்  கொஞ்சமாக டெபிட்  ஆனதால், அவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். ஒருவர் கணக்கில் ஐம்பதாயிரம், இன்னொருவர் கணக்கில்  ஐந்து லட்சம் என 10 பேர் அக்கவுன்ட்டிலும் இருந்த பணம் மொத்தமாக சுருட்டப்பட,  அவர்கள் அத்தனைபேரும் ஸ்தம்பித்துப் போனார்கள். உடனடியாக வங்கிக்கு போன் செய்தார்கள்... போலீஸுக்குப் போனார்கள்... ஆனால், எதுவும் நடக்கவில்லை!  போலீஸ், வங்கியை அணுகச் சொன்னது. வங்கி, போலீஸை அணுகச்சொன்னது. இப்படி அலைக்கழிக்கப்பட்ட அவர்கள், கையில் ஸ்டேட்மென்ட்டை ஜெராக்ஸ் எடுத்து வைத்துக்கொண்டு, பணம் திரும்ப வருமா... வரதா? என்று தெரியாமல் விரக்தியில் இருக்கிறார்கள். 

தனது ஜூன் மாத சம்பளத்தைப் பறிகொடுத்துவிட்டுப் பரிதவிக்கும் பாலமுருகனிடம் இதுகுறித்துப் பேசினோம், ``நேற்று காலை எனது போனுக்கு தொடர்ந்து மெசேஜுகள் வந்துகொண்டே இருந்தன. எடுத்துப் பார்த்தால், பத்தாயிரம் பத்தாயிரமாக என் அக்கவுன்ட்டில் எடுக்கப்பட்டதற்கான மெசேஜ் அது. ஏ.டி.எம் கார்டு என்னிடம் இருக்கும்போது, எப்படி என் அக்கவுன்ட்டில் இருந்து பணம் டெபிட் ஆகும்? எங்கேயோ தப்பு நடக்குது’னு புரிஞ்சுருச்சு. உடனே பேங்குக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்லி, அக்கவுன்ட்டை உடனே ப்ளாக் பண்ணேன். அதுக்குள்ள ஐம்பதாயிரம் போயிருச்சி.  உடனே பேங்குக்கு ஓடினேன். நீங்க சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷன்ல போய் ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்திருங்கன்னு சொன்னாங்க. 

அங்கே போனால், இது எங்க லிமிட் கிடையாது, ரேஸ்கோர்ஸ் போங்கன்னு சொல்லிட்டாங்க. அங்கே போனால், கமிஷனர் ஆபீஸ்ல உள்ள சைபர் க்ரைம்ல போய் கம்ப்ளைன்ட் கொடுங்கன்னு சொன்னாங்க. அங்கே போனால், பேங்க் ஸ்டேட்மென்ட் கொண்டுவாங்கன்னு சொன்னாங்க... பேங்க்ல போய் ஸ்டேட்மென்ட் வாங்கிட்டு வந்து கம்ப்ளைன்ட் கொடுக்க வந்தப்பதான் என்னைப்போலவே இன்னும் 3 பேர் கம்ப்ளைன்ட் கொடுக்க வந்திருந்தாங்க. அவங்களுக்கு 5 லட்சம், 4 லட்சம்னு பெரிய தொகை டெபிட் ஆகியிருக்கு. அவங்ககிட்ட விசாரிச்சப்பதான் அவங்களுக்கும் எனக்கும் உள்ள ஒற்றுமை தெரிய வந்துச்சு.  நாங்க எல்லாருமே  கடந்த 20-ம்தேதி வரதராஜபுரத்தில் உள்ள ஐ.சி.ஐ.சி .ஐ பேங்க் ஏ.டி.எம்-ல பணம் எடுத்தவங்க. அந்த ஏ.டி.எம்லதான் சீக்ரெட்டா ஸ்கிம்மர் கருவியை வெச்சு எடுத்திருக்காங்க.

இப்படி சுமார் பத்து பேரோட பணம் பறிபோச்சுன்னு சொல்லிக்கிறாங்க. எனக்கு சம்பளம்போட்டு ரெண்டு நாள்கூட ஆகல. மொத்தத்தையும் தூக்கிட்டானுங்க. பேங்க்ல விசாரிச்சதுல பெங்களூர்ல உள்ள கஸ்தூரி நகர்ல என் பணம் எடுக்கப்பட்டிருக்குனு சொல்றாங்க. டிஜிட்டல் இந்தியா ஸ்மார்ட் இந்தியானு சொல்லி எல்லாரையும் வங்கியை நோக்கி வரவெச்சுட்டாங்க. ஆனால், வங்கிகள் இவ்வளவு பலவீனமான பாதுகாப்பு வசதிகளோட இருக்குது. படிச்ச எங்களாலேயே இதிலிருந்து தப்பிக்க முடியலைன்னா, பாமர மக்களோட நிலைமையை நினைத்தால் ரொம்பப் பரிதாபமா இருக்கு. வங்கிகள் தங்களோட பொறுப்பை உணர்ந்து  பாதுகாப்பை இன்னும் பலப்படுத்த வேண்டும்" என்றார்.

இதுகுறித்து கோவை திருச்சி சாலையில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் மண்டல அலுவலகத்துக்குச் சென்று விளக்கம் கேட்டோம். `` போலீஸ் விசாரித்துவருகிறது. இதுகுறித்து இப்போதைக்கு எங்களால் எதுவும் சொல்ல முடியாது" என்று கூறிவிட்டனர்.