வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (07/06/2018)

கடைசி தொடர்பு:07:22 (08/06/2018)

வந்தாச்சு... அந்த்யோதயா எக்ஸ்பிரஸ்! சென்னை - நெல்லை இடையே நாளை முதல் இயக்கம்

சாமான்ய மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நாளை முதல் சென்னையில் இருந்து நெல்லைக்குத் தொடங்குகிறது. தினமும் இந்த ரயில் சேவை இயக்கப்பட இருப்பது பயணிகளை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

சாமான்ய மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, நாளை முதல் சென்னையிலிருந்து நெல்லைக்குத் தொடங்குகிறது. தினமும் இந்த ரயில் சேவை இயக்கப்பட இருப்பது பயணிகளை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.

அந்த்யோதயா எக்ஸ்பிரஸ்

சென்னையிலிருந்து நெல்லை வரை செல்லும் வகையில் அந்த்யோதயா ரயில் சேவை இயக்கப்படும் என கடந்த ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த ரயில் சேவை தொடங்கப்படுவதில் கால தாமதம் ஏற்பட்டுவந்த நிலையில், ஏப்ரல் 27-ம் தேதி முதல் சென்னை தாம்பரத்திலிருந்து நெல்லை வரை இரு மார்க்கத்திலும் இந்த ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது. 

ஏழை, எளிய பயணிகள் ரயிலில் செல்வதற்கு ஏற்ற வகையில் 200 ரூபாய் கட்டணத்தில் இயக்கப்படும் இந்த ரயில் சேவைகுறித்த அறிவிப்பால் மக்கள் மகிழ்ந்திருந்த நிலையில், மறுநாளிலேயே தொழில்நுட்பக் காரணங்களுக்காக இந்தச் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதனால், அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர். அரசுப் பேருந்துகளில் கட்டணம் உயர்ந்துள்ள நிலையில், தனியார் பேருந்துகளில் சாமான்ய மக்கள் பயணிக்க முடியாத அளவுக்கு கட்டணம் உள்ளது. 

இந்த நிலையில், அந்த்யோதயா எக்ஸ்பிரஸ்  சேவையை விரைவாக இயக்க தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்திவந்தனர். இந்தச் சூழலில், அந்த்யோதயா ரயில் சேவைகுறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 

இது தொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’’தாம்பரம்-நெல்லை இடையேயான அந்த்யோதயா ரயில் சேவை நாளை (8-ம் தேதி) முதல் தொடங்க இருக்கிறது. மத்திய ரயில்வே அமைச்சர் ராஜன் கோஹைன் மாலை 4.30 மணிக்கு தாம்பரத்திலிருந்து இந்த ரயில் சேவையை கொடியசைத்துத் தொடங்கிவைக்க உள்ளார். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.என்.ராமச்சந்திரன் எம்.பி மற்றும் எஸ்.ஆர் ராஜா எம்.எல்.ஏ., ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள். 

தினமும் தாம்பரத்திலிருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் (06191), செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய இடங்களில் நின்று செல்லும். இந்த ரயில், பிற்பகல் 3.30 மணிக்கு நெல்லையைச் சென்றடையும். பின்னர், மறுமார்க்கத்தில் நெல்லையிலிருந்து மாலை 5.30 மணிக்குப் புறப்படும் ரயில் (06192), மறுநாள் காலை 9.45 மணிக்கு சென்னையைச் சென்று சேரும். இந்த ரயில் 16 பொதுப் பெட்டிகள் கொண்டதாக இருக்கும்’’ என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு, ரயில் பயணிகளை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.