தூத்துக்குடியில் 16 நாள்களுக்குப் பின் கடலுக்குச் சென்ற மீனவர்கள்!

துாத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தைக் கண்டித்து, கடலுக்குச் செல்லாமல் இருந்த, நாட்டுப் படகு மீனவர்கள் 16 நாள்களுக்குப் பிறகு, இன்று மீன்பிடிக்கச் சென்றனர். 

மீனவர்கள்

தூத்துக்குடியில் கடந்த  மே 22-ம்  தேதி, ஸ்டெர்லைட் ஆலையை  மூடக்கோரி ஆட்சியர்  அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மக்கள் நடத்தினர். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, தூத்துக்குடி மாவட்ட  நாட்டுப்படகு மீனவர்கள் ஒருநாள் கடலுக்குள் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அன்றைய தினம் பேரணியில் ஏற்பட்ட கலவரத்தில் நடந்த துப்பாக்கிசூட்டில், 13 பேர் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, மறுநாள் 23-ம் தேதி முதல் நாட்டுப் படகு மீனவர்கள் மீ்ன்பிடிக்கச் செல்லாமல், தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவந்தனர். 

இதற்கிடையே, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் உடல்களும் உடற்கூராய்வு செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 16 நாள்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த, நாட்டுப் படகு மீனவர்கள், தங்களின் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று,  இன்று முதல் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். வங்கக்கடலில் கடந்த மாதம் முதல்,  மீ்ன்பிடி தடை காலம் அமலில் இருப்பதால், விசைப்படகு மீனவர்களும் கடலுக்குள் செல்லவில்லை. வரும், 14-ம் தேதி மீன்பிடித்தடை காலம், முடிவுக்கு வருகிறது.  

மீனவர்கள்

தூத்துக்குடியில்,  ஏற்கெனவே  நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்களுக்குள் பிரச்னை இருந்து வருகிறது. இதனால், கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் இருக்கின்றனர். இந்த நிலையி்ல், மீன்பிடி  தடைக்காலம் முடிந்தாலும், முறையாகப் பதிவு செய்யாத விசைப்படகுகளை, கடலுக்குள் செல்ல அனுமதிக்கக்கூடாது என, நாட்டுப்படகு மீனவ சங்கத் தலைவர், கயாஸ், கடந்த 5-ம் தேதி ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் மனு ஒன்று கொடுத்துள்ளார். நீண்ட நாள்களாக தொடரும் இந்த பிரச்னை, இந்த முறையாவது, தீருமா என்ற எதிர்பார்ப்பு துாத்துக்குடி மீனவர்களிடம் எழுந்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!