வெளியிடப்பட்ட நேரம்: 02:39 (08/06/2018)

கடைசி தொடர்பு:18:47 (11/06/2018)

2 லட்சம் டன் குப்பைகளை அகற்றி கும்பகோணம் நகராட்சி சாதனை..!

கும்பகோணம் நகராட்சி குப்பை கிடங்கில் குவிந்த 2 லட்சம் டன் குப்பைகளை மூன்று ஆண்டுகளிலேயே மறு சுழற்ச்சிக்காக தரம் பிரிக்கபட்டு வெளியே அனுப்பபட்டதால் அந்த குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளது.  இது இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த நகராட்சியில் தான் செய்யபட்டுள்ளது என தெரிவிக்கிறார்கள்.

கும்பகோணம் நகராட்சி குப்பைக் கிடங்கில் குவிந்த 2 லட்சம் டன் குப்பைகள், மூன்று ஆண்டுகளிலேயே மறு சுழற்சிக்காகத் தரம் பிரிக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டதால், அந்தக் குப்பை முழுவதும் அகற்றப்பட்டுவிட்டன. இது, இந்தியாவிலேயே முதன் முறையாக இந்த நகராட்சியில்தான் செய்யப்பட்டுள்ளது எனப் பெருமைபொங்கச் சொல்கிறார்கள் நகராட்சி நிர்வாகிகள்.

ஒவ்வொரு நகராட்சியிலும் மக்கள் பயன்படுத்தும் குப்பையை அகற்றி, அதற்கான குப்பைக்கிடங்கில் சேர்த்துவைப்பார்கள். இதற்காக பெரிய அளவில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனாலும், அந்த இடமே குப்பையால் நிறைந்து, அவற்றை என்ன செய்வதென்று தெரியாமல், நிர்வாகத்துக்கு பெரிய தலைவலியைக் கொடுக்கும். ஒரு சில இடங்களில், பணியாளர்களே குப்பையைத் தீ வைத்துக் கொளுத்துவதும் உண்டு. இதனால், பல பிரச்னைகள் ஏற்படும். இந்த நிலையில், தேங்கிய குப்பையை கும்பகோணம் நகராட்சியில் தரம்பிரித்து வெளியே அனுப்பியதன்மூலம் 2 லட்சம் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

கும்பகோணம் நகராட்சியில், மொத்தம் 45 வார்டுகள் உள்ளன. இங்கு, தினந்தோறும் வீடுகள், திருமண மண்டபங்கள், ஹோட்டல்களிலிருந்து சுமார் 70 டன் குப்பை வெளியேறுகிறது. இந்தக் குப்பை எல்லாம் லாரிகள்மூலம் சேகரிக்கப்பட்டு தேப்பெருமாநல்லூர் என்ற இடத்தில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான குப்பைக்கிடங்கில் கொட்டிவைக்கப்படுகிறது. சுமார் 25 ஏக்கர் பரப்பளவுகொண்ட இந்தக் குப்பைக்கிடங்குகளில், 10 ஏக்கர் பரப்பளவில் மலைபோல குவித்துவைக்கப்பட்டது. குப்பைக்கிடங்கில் திடீரென ஏற்படும் தீ விபத்து, அதைச் சுற்றி வசிக்கும் மக்களுக்கு பெரும் மன உளைச்சலைத் தந்ததோடு, அவர்களுக்குப் பிரச்னையாகவும் இருந்துவந்தது.

தினமும் குப்பைகள் குவிவதால் இதனை மறு சுழற்சிக்காக பிரிக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி ஜிக்மா என்ற தனியார்  நிறுவனத்துடன் இணைந்து கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் குப்பைகளை மறு சுழற்ச்சிக்காக பிரிக்கும் திட்டம் துவங்கபட்டது. 10 ஏக்கர்  பரப்பளவில் இருந்த குப்பைகளை தினமும் இயந்திரத்தின் மூலம் பாலீத்தீன் பைகள், சாக்குகள், தேங்காய் சிரட்டைகள், ரப்பர்கள், செருப்புகள், டயர்கள், தேங்காய் நார்கள், இரும்புகள் என 15 வகையான பொருட்களைத்  தனி்த்தனியாக பிரிக்கபட்டது. குப்பையில் உள்ள  மக்கிய மண் பிரிக்கப்பட்டு அவை உரமாகவும் தயாரி்க்கப்பட்டது.

பிரித்தெடுக்கபட்ட பாலீத்தீன் பைகள் மீண்டும் மறு சுழற்ச்சிக்காக வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தேங்காய் சிரட்டைகள் செங்கல் சூளைக்கும், செருப்பு உள்ளிட்ட ரப்பர்பொருட்கள் செருப்பு கம்பெனிகளுக்கும், இரும்பு உள்ளிட்ட பொருட்கள் இரும்பாலைக்கும், தேங்காய்நார்கள், மரத்துகள்கள் ஹோட்டல்களுக்கும், மக்கிய மண் வயல்களுக்கு உரமாக பிரித்து அனுப்பப்பட்டது. இதற்காக தினமும் தொழிற்சாலைபோல் செயல்பட்டு வந்த இந்தக் குப்பை கிடங்களி்ல் 80-க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் பணியாற்றினர்.

கடந்த 2015-ம் ஆண்டு 1.40 லட்சம் டன் குப்பைகள் இருந்தது. மேலும் கடந்த 2016-ம் ஆண்டு மகாமகத்தின்போது 60 ஆயிரம் டன் குப்பைகள் சேர்ந்தது. மொத்தம் 2 லட்சம் டன் குப்பைகளும் தரம்பிரிக்கப்பட்டு அவை மறு சுழற்ச்சிக்காக வெளியே அனுப்பப்பட்டது. இதன் மூலம் மலைபோல் குவிருந்திருந்த குப்பைகள் அனைத்தும் தற்போது அகற்றப்பட்டு விட்டது.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் உமா மகேஸ்வரி கூறியதாவது, 'கும்பகோணம் நகராட்சியில் தினமும் குப்பைக் கிடங்கில் மலை போல் குப்பைகள் தேங்கிக் கொண்டே இருந்தது. இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என எண்ணினோம். இதற்காக இந்தியாவிலேயே முதன் முறையாக இங்கு குப்பைகளைத் தரம் பிரிப்பதற்கானத் திட்டம் போடபட்டு அந்தப் பணியை தனியாரிடம் ஒப்படைத்தோம். 10 ஏக்கரில் தேங்கியிருந்த 2 லட்சம்  டன் குப்பைகள் அனைத்தும் தரம் பிரிக்கப்பட்டு அவை மறுசுழற்ச்சிக்காக வெளியே அனுப்பப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதன் முறையாக கும்பகோணம் நகராட்சியில்தான் குப்பைகள் மறுசுழற்ச்சிக்காக வெளியே அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் உள்ள 500 மாவட்ட ஆட்சியர்களுடன் குப்பைகள் மறுசுழற்ச்சி தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கும்பகோணம் நகராட்சி மறுசுழற்ச்சி பணிகளை முன்மாதிரி பணியாக காட்டி அங்கு விவாதிக்கப்பட்டது. மேலும், புதுடெல்லியில் அனைத்து மாநில நகராட்சி ஆணையர்களுடன் நடைபெற்ற கருத்தரங்கில் கும்பகோணம் நகராட்சியின் குப்பைகள் மறுசுழற்ச்சி செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டு, தூய்மை இந்தியா திட்டத்தின் பணிகளில் முன் மாதிரி பணியாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது என பெருமையாகத் தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க