வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (08/06/2018)

கடைசி தொடர்பு:10:30 (08/06/2018)

ஒரு மாணவர்கூட இல்லாத பள்ளிக்கூடம்..! புதுக்கோட்டை விநோதம்

அடுத்த ஆண்டு பொன்விழா கொண்டாட வேண்டிய ஒரு பள்ளிக்கூடம், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களின் அலட்சியத்தால், மூடுவிழாவுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் பாச்சிக்கொல்லை ஊராட்சியில் உள்ள வாழைக்கொல்லை அரசு தொடக்கப் பள்ளியில், இந்த ஆண்டு ஒரு மாணவர்கூட பயிலவில்லை. இதனால், இந்தப் பள்ளி விரைவில் மூடப்படும் சூழல் உருவாகியுள்ளது.

1969-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தப் பள்ளி, இங்குள்ள சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான ஏழை எளிய மாணவர்களுக்கு கல்விச் சேவையாற்றிவந்தது. 10 ஆண்டுகளுக்கு முன்புவரை ஏராளமான மாணவர்கள் படித்துவந்தார்கள். அதன் பிறகு, மாணவர் சேர்க்கை படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்துள்ளது.

ஆனாலும், இந்தப் பள்ளிக்கு புத்துயிர் ஊட்டும் விதமாக, 5 ஆண்டுகளுக்கு முன்பு 11 லட்சம் ரூபாய் செலவில் வகுப்பறைகளும், 3.27 லட்சம் ரூபாய் செலவில் சமையலறை, கழிவறை உள்ளிட்டவையும் கட்டப்பட்டுள்ளன. ஆனால், கல்வித்தரம் நல்ல முறையில் இல்லாததால் மாணவர் சேர்க்கை குறைந்துகொண்டே வந்தது.

கடந்த ஆண்டு, முருங்கொல்லை என்ற கிராமத்தைச் சேர்ந்த 10 மாணவர்கள் படித்துள்ளார்கள். இந்த ஆண்டு, முருங்கொல்லையில் புதிதாகப் பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டதால், அங்கிருந்து ஒரு மாணவர்கூட வாழைக்கொல்லை அரசு தொடக்கப் பள்ளியில் சேரவில்லை. இன்னும் ஒரு வாரத்திற்குள் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் எனவும், இல்லையென்றால் இந்தப் பள்ளிக்கூடம் விரைவில் மூடப்படும் என்றும் இப்பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு புதுக்கோட்டை மாவட்ட கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.