வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (08/06/2018)

கடைசி தொடர்பு:08:20 (08/06/2018)

கதவணை கட்டக்கோரி ஆற்றில் இறங்கிப் போராட்டம்..! கடலூர் விவசாயிகள் தீர்மானம்

110விதியின் கீழ் ரூ 400 கோடியில் கதவணை கட்டப்படும் அறிவிப்பு வெளியிட்டார். அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமான பணியை துவக்க கோரி வரும்12ம் தேதி காலை ம. ஆதனூர் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்துவது

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ம.ஆதனூரில், கொள்ளிடம் கீழணைப் பாசன விவசாயிகள் சங்கக் கூட்டம் நடந்தது. இதில், கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டக் கோரி, ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி தலைமைதாங்கினார். கான்சாகிப் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கச் செயலாளர் கண்ணன், ம.ஆதனூர் சோமசுந்தரம், செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காட்டுமன்னார்கோவில்

கொள்ளிடம் ஆற்றில், கடலூர் மாவட்டம் ம.ஆதனூர், நாகை மாவட்டம் குமாரமங்கலம் ஆகிய ஊர்களுக்கு இடையே முன்னாள் 
முதல்வர் ஜெயலலிதா கடந்த 04.08.2014-ம் தேதி சட்டமன்றத்தில் 110-விதியின் கீழ் ரூ 400 கோடியில் கதவணை கட்டப்படும் என்று அறிவிப்பு  வெளியிட்டார். அதற்கு நிதி ஒதுக்கீடுசெய்து கட்டுமானப் பணியைத் தொடங்கக் கோரி, வரும்12-ம் தேதி காலை ம. ஆதனூர் கொள்ளிடம் ஆற்றில் இறங்கிப் போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், 'கொள்ளிடக் கரையோர கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைத்துவிட்டது. இதனால், கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டிய பிறகே கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் எடுக்க வேண்டும் என்று கோரி எய்யலூர் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட அலுவலகத்தை முற்றுகையிடுவது, காவிரி நீர் பிரச்னையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியக் கட்டுப்பாட்டில் கர்நாடகாவில் இருக்கும் அனைத்து அணைகளும் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இந்த ஆண்டு குறுவை பட்ட சாகுபடிக்கு காவிரித் தண்ணீர் கிடைக்க நடிவடிக்கை எடுக்க வேண்டும். சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமல், இலவச மின் இணைப்பு வழங்கி 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும், பாசன வாய்க்கால்களைத் தூர் வாரிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.