குழந்தை கடத்தல் நாடகம்..! தந்தையும் கூட்டாளியும் கைது

கடந்த 5-ம் தேதி தன்னுடைய குழந்தை ராகினி கடத்தப்பtடதாக விருதுநகர் அல்லம்பட்டியை

கடந்த 5-ம் தேதி, தன்னுடைய குழந்தை ராகினி கடத்தப்பட்டதாக விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த ராஜ்திலக் என்பவர் கொடுத்த புகாரை விசாரித்த விருதுநகர் காவல்துறை, தற்போது புகார் கொடுத்த ராஜ்திலக் உட்பட நான்கு பேரைக் கைதுசெய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடத்தல்காரர்கள் கைது

தான் வேலை செய்யும் பருப்பு மில்லின் உரிமையாளர் சண்முகக்கனியின் குழந்தையைக் கடத்த வந்த கும்பல், அதற்கு உதவி செய்ய தன்னை வற்புறுத்தியதாகவும், அதற்கு ஒத்துழைக்காததால் தன் குழந்தையை கத்தியைக் காட்டி மிரட்டி கடத்திச் சென்றுவிட்டார்கள் என்று ராஜ்திலக் புகார் கொடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து, காவல்துறை தனிப்படை அமைத்துத் தேடியபோது, இரண்டு மணி நேரத்தில் பஜார் காவல் நிலையம் பின்புறம் உள்ள காட்டுப் பகுதியிலிருந்து குழந்தை மீட்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு மூலமும் ராஜ் திலக்கிடம் நடத்திய விசாரணை அடிப்படையிலும் அவருடன் மில்லில் பணிபுரிந்த வெங்கடேஷ் என்பவரை விருதுநகரில் கைதுசெய்தனர். அவர் கூறிய தகவலின் அடிப்படையில், அவர்களின் நண்பர்களான சென்னையைச் சேர்ந்த பிரபு, அசோக் ஆகியோரை சோளிங்கநல்லூரில் வைத்து கைதுசெய்து விருதுநகர் கொண்டுவந்தனர்.

அவர்களிடம் போலீஸ் விசாரணை செய்ததில், குழந்தையின் தந்தை ராஜ்திலக்கும் இந்தக் கடத்தலுக்கு உடந்தை என்பது தெரியவந்தது. ராஜ்திலக் வேலைசெய்யும் மில் உரிமையாளர் சண்முகக்கனியிடம் நாடகமாடி பணம் பறிக்கத் திட்டமிட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர். 
'பருப்பு மில்லின் உரிமையாளர் சண்முகக்கனியிடம் பணம் பரிப்பதற்கு வெங்கடேஷ் தலைமையில் திட்டம் தீட்டினோம். அதற்கு, முதலில் ராஜ்திலக்கின் குழந்தையைக் கடத்தி, அதற்காக உரிமையாளரின் குழந்தையைத் தந்தால் ராஜ்திலக் குழந்தையை விட்டுவிடுவதாக மிரட்டி,  நான்குகோடி வரை பறிப்பதற்குத் திட்டம் தீட்டியதாகவும், அதற்கு குழந்தையின் தந்தை ராஜ்திலக் உதவியதாகவும்' விசாரணையில் கூறியுள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 4 பேரையும் வரும்  21-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 
 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!