வெளியிடப்பட்ட நேரம்: 07:43 (08/06/2018)

கடைசி தொடர்பு:07:43 (08/06/2018)

'வேல்முருகன் கைதுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்' - தமிழர் தாயகம் கட்சி குற்றச்சாட்டு

"வேல்முருகன் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தேசத் துரோக வழக்கு பொய்யாகப் புனையப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்" என தமிழர் தாயகம் கட்சியின் நிறுவனர் செந்தில் மள்ளர் தெரிவித்துள்ளார்.

வேல்முருகன்

 கோவில்பட்டியில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், " தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி நடந்த போராட்டத்தின்போது  ஏற்பட்ட கலவரத்தில், காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இப்படி, 13 உயிர்கள் காவு வாங்கப்பட்டு துக்கம் கலையாத நிலைமையில்,  ஸ்டெர்லைட் ஆலையை இன்னும் ஓரிரு மாதங்களில் மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்றுவருகின்றன என்று அந்த ஆலையின் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் கூறியுள்ளார். 

இதைக் கருத்தில்கொண்டு, மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு மக்களோடு இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.  தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தேசத் துரோக வழக்கு பொய்யாகப் புனையப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், ஓரிரு மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட வழக்கின் அடிப்படையில், வேல்முருகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

வேல்முருகன், சீமான் உள்ளிட்ட தமிழ் தேசியத் தலைவர்கள் தூத்துக்குடி நகருக்கு வந்துவிடக் கூடாது என்று திட்டமிட்டு அரசு இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. வேல்முருகனின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, அவரதுமீது பொய்யாகப் போடப்பட்டுள்ள தேசத் துரோக வழக்கை தமிழக அரசு திரும்பப் பெற்று, அவரை விடுதலைசெய்ய வேண்டும். 

ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய மக்கள் நலனுக்காகப் போராடக்கூடியவர்கள்மீது தேசத் துரோகம், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாய்வது நல்லதல்ல.  இதுபோன்ற நடவடிக்கைகளைத் தமிழக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். சீமான் மீது தூசு, துரும்பு பட்டாலும் அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்ற செய்தியை தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் எச்சரிக்கையாக இந்த வேளையில் விடுக்கிறோம். மோடியின் எடுபிடி அரசாக இந்த அரசு இருப்பதை சமூக ஊடகங்கள் வழியாக மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதன் விளைவு எதிர்வரும் தேர்தலில் வெளிப்படும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க