வெளியிடப்பட்ட நேரம்: 08:47 (08/06/2018)

கடைசி தொடர்பு:08:56 (08/06/2018)

’பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றால் கிம் அமெரிக்காவுக்கு அழைக்கப்படலாம்’ - ட்ரம்ப்

சிங்கப்பூரில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தால் கிம் ஜாங் உன் அமெரிக்காவுக்கு அழைக்கப்படலாம் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்

அணு ஆயுதத்தைக் கைவிடுவதாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்ததையடுத்து அமெரிக்க அதிபர் ட்ரம்பை நேரில் சந்திக்கவும் கிம் விருப்பம் தெரிவித்திருந்தார். அதன்படி ட்ரம்பும் வடகொரிய அதிபரின் அழைப்பை ஏற்று வரும் ஜூன் 12-ம் தேதி இருவரும் சிங்கப்பூரில் சந்திக்கத் திட்டமிடப்பட்டு அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அணு ஆயுத சோதனையின் மூலம் பல நாடுகளை அச்சுறுத்தி வந்த வடகொரியா திடீரென தன் சோதனையைக் கைவிடுவதாக அறிவித்தது, அதிபர் ட்ரம்பை சந்திக்க விருப்பம் தெரிவித்ததும் உலக நாடுகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இந்நிலையில், இவர்களின் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ‘சிங்கப்பூரில் நடைபெற உள்ள வடகொரிய அதிபர் உடனான சந்திப்பு சுமுகமாக நிறைவடைந்தால் கிம் அமெரிக்காவுக்கு அழைக்கப்படலாம். மேலும் இது அமெரிக்கா மற்றும் வடகொரியா உடனான நிலையான நட்பைப் பெற வழிவகை செய்யும். அமெரிக்கா, ஜப்பான், சீனா போன்ற நாடுகள் பொருளாதார ரீதியாக வடகொரியாவுக்கு உதவும்.’ எனத் தெரிவித்துள்ளார்.