வெளியிடப்பட்ட நேரம்: 09:01 (08/06/2018)

கடைசி தொடர்பு:09:01 (08/06/2018)

கர்ப்பிணிப் பெண்ணுக்கு மறுக்கப்பட்ட ஆம்புலன்ஸ்! 7 கி.மீ வரை தூக்கிச்சென்ற உறவினர்கள்..!

 ஆம்புலன்ஸ் கிடைக்காததால், கர்ப்பிணி பெண்ணை 7 கி.மீ தூரத்துக்கு, அவரது உறவினர்களே தூக்கிச் சென்ற துயரம் கேரளாவில் நடந்துள்ளது.

ஆம்புலன்ஸ் கிடைக்காததால், கர்ப்பிணிப் பெண்ணை 7 கி.மீ தூரத்துக்கு, அவரது உறவினர்களே தூக்கிச்சென்ற துயரம் கேரளாவில் நடந்துள்ளது.

இடவானி

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் அருகே உள்ள மலை கிராமம், இடவானி. அட்டப்பாடியைச் சுற்றியுள்ள 180-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் இடவானியும் ஒன்று. ஆனால், இந்த கிராம மக்கள் அடிப்படை வசதிகளுக்காக அல்லாடி வருகின்றனர். இடவானி கிராமத்தைச் சேர்ந்த பனாலி என்பவரின் மனைவி மணி. கர்ப்பிணிப் பெண்ணான இவருக்கு, நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல ஆம்புலன்ஸ் கேட்டுள்ளனர். ஆனால், 3 மணி நேரம் காத்திருந்தும் அவர்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கப்படவில்லை.

இதைத் தொடர்ந்து, மணியின் உறவினர்கள் ஒரு கம்பில் தொட்டில் போன்று கட்டி தூக்கிச்சென்றுள்ளனர். இப்படி அவர்கள் 7 கி.மீ-க்கு அந்தப் பெண்ணை தூக்கிச் சென்றனர். பின்னர், பூதயார் என்ற கிராமத்தில் தனியார் ஜீப் ஒன்றைத் தயார்செய்து, அருகில் உள்ள பழங்குடி மக்களுக்கான சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு சென்ற 10 நிமிடத்திலேயே, அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது மணியும் குழந்தையும் நலமாக இருக்கின்றனர்.

இடவானி

இதுகுறித்து அட்டப்பாடியைச் சேர்ந்த பழங்குடி மக்கள் கூறுகையில், எங்கள் ஊரில் ஆம்புலன்ஸ் பாதி தூரத்துக்குத்தான் வர முடியும். ஆனால், கார் போன்ற வாகனங்கள் முழுவதுமாக வரலாம். அதைத்தான் நாங்கள் கேட்டோம். அதிகாரிகள் அனுப்பவில்லை. நாங்களும் இதற்கு ஓர் தீர்வு வேண்டுமென நீண்ட நாள்களாகக் கேட்டுவருகிறோம். இதுவரை எங்களை யாரும் கண்டுகொள்வதில்லை என்றனர்.

வனப்பகுதியின் சாலை மிகவும் மோசமாக இருப்பதாலும், வரகை ஆற்றில் நீரின் அளவு அதிகரித்திருப்பதாலும் அந்த வழியே செல்ல முடியாது என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். எங்கள் ஊருக்கு  பாதி தூரத்துக்கு ஆம்புலன்ஸ் வருவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. அப்படி வந்திருந்தால்கூட, இந்த அளவுக்குக் கஷ்டம் ஏற்பட்டிருக்காது என்கின்றனர் இடவானி கிராம மக்கள். இந்நிலையில், இந்தச் சம்பவம்குறித்து, பாலக்காடு மாவட்ட நிர்வாகத்திடம் மாநில பெண்கள் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.