வெளியிடப்பட்ட நேரம்: 09:53 (08/06/2018)

கடைசி தொடர்பு:10:12 (08/06/2018)

`கோச்சிங் சென்டர்ல சொன்னபடி தேர்வு எழுதியும் மார்க் கிடைக்கல' – கதறும் சுபஶ்ரீயின் தந்தை

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், கடந்த சில தினங்களுக்கு முன் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீபா தற்கொலை  செய்துகொண்டார். அவரின் இறுதிச்சடங்கு நேற்று முன் தினம் மாலை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, திருச்சி மாவட்டத்தில் இன்னொரு விபரீதம் அரங்கேறியது. மருத்துவராகும் கனவில் இருந்த மாணவி சுபஶ்ரீ தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.

சுபஶ்ரீ

திருச்சி நம்பர் 1 டோல்கேட்டை அடுத்துள்ள உத்தமர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றிவருகிறார். அ.தி.மு.க-வின் அண்ணா தொழிற்சங்கத்தின் திருச்சி கிளை தலைவராகவும் இருக்கும் இவரது ஒரே மகளான சுபஸ்ரீ, சிறுவயதில் இருந்தே மருத்துவராக வேண்டும் என்கிற கனவில் இருந்தார். பத்தாம் வகுப்பில் 460 மதிப்பெண் எடுத்த அவரை திருச்சியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்து படிக்கவைத்தார். விடுதியில் தங்கிப் படித்த சுபஶ்ரீ, நல்ல முறையில் படித்து வந்தார்.

கடந்த வருடம் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை விட நீட் தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தனர். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய சுபஶ்ரீயை திருச்சியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் சேர்த்து படிக்கவைத்தார். கோச்சிங் சென்டரில் சொல்லிக்கொடுத்தபடி, பரீட்சை எழுதிய சுபஶ்ரீ, மருத்துவக் கனவினால், வேறு எந்தப் படிப்புக்கும் விண்ணப்பம் போடாமல் உறுதியாக இருந்தார். ஆனால், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 907 மதிப்பெண்களும், நீட் தேர்வில் 24 மதிப்பெண்களுமே பெற்றிருந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு 10 மணி அளவில் தனது அறையில் துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலைசெய்துகொண்டார்.  அவரின் உடலை மீட்ட, திருச்சி கொள்ளிடம் டோல்கேட் போலீஸார், வழக்குப் பதிவு செய்து ஶ்ரீரங்கம் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று மதியம் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு, சுபஶ்ரீயின் உடல் திருச்சி ஓயாமாரி சுடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது உறவினர்கள், பெற்றோர் சுபஶ்ரீயின் உடலைப் பார்த்து கதறினர். அந்தப் பகுதியே சோகத்தில் உறைந்தது.

இந்நிலையில் நம்மிடம் பேசிய சுபஶ்ரீயின் அப்பா கண்ணன், “12-ம் வகுப்பில் மதிப்பெண் குறைந்தாலும், ‘நீட்’ தேர்வில் தேர்ச்சிபெற்றால் மருத்துவராகிவிட முடியும் என்பதால், நீட் தேர்வு ரிசல்ட்டுக்காகக் காத்திருந்தார். திருச்சியில் இயங்கிவரும் தனியார் பயிற்சி  நிறுவனத்தில் 25 நாள்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் கட்டணமாகச் செலுத்தினோம். அவர்கள் சொன்னபடிதான் என் மகள் பரீட்சை எழுதினாள். நீட் தேர்வில் எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கும்படி அவளுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்கள் கூறியதாகக் கூறினாள். இந்நிலையில்,  நீட் தேர்வில் 24 மதிப்பெண்களே எடுத்திருந்தார். எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்தும் மதிப்பெண் குறைந்ததால், கடந்த சில தினங்களாகவே தனிமையில் இருந்தாள். நாங்கள் ஆறுதல் கூறினாலும் அவளால் டாக்டராக முடியவில்லை என்பதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வெளிநாடுகளில் அவளை டாக்டருக்கு சேர்த்துவிட்டு படிக்க வைக்கவும் தயாராக இருந்தேன். ஆனால் அதற்குள் அவள் இப்படி செஞ்சிட்டாளே?” என்றார் கண்ணீருடன்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க