'ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும்' - ராம்நாத் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள ஆலை நிர்வாகம்

"ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என சி.இ.ஓ., கூறுயுள்ளதாகப் பரவிவரும் தகவல்கள் தவறானவை. ஆலையை அரசு மூடி சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், எக்காரணம் கொண்டும் ஆலை இயக்கப்படாது." என ஆலை நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் என கடந்த மே 22-ம் தேதி நடந்த மக்களின் முற்றுகைப் போராட்டத்தில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

 அரசியல் கட்சிகளும், சில அமைப்புகளும் ஆலையை நிரந்தரமாக மூடிட கடுமையாக வலியுறுத்திய  நிலையில், தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டு, ஆலையும்  மூடி சீல் வைக்கப்பட்டது. இதை மீண்டும் திறக்கக் கூடாது என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். இந்நிலையில், "ஸ்டெர்லைட் ஆலை ஓரிரு மாதங்களில் மீண்டும் திறக்கப்படும்; தூத்துக்குடியில் அமைதி திரும்புவதற்காகக் காத்திருக்கிறோம். ஆலையைத் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன " என ஸ்டெர்லைட்  ஆலையின் சி.இ.ஓ., ராம்நாத், டெல்லியில் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதற்கு, தூத்துக்குடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், ஆலை நிர்வாகம் சார்பில் அறிவிப்பு  ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலையின் மக்கள் தொடர்புத்துறை தலைவர் இசக்கியப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும்' என  தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் கூறியதாகத் தகவல்கள் பரவிவருகின்றன. எங்களின் சி.இ.ஓ., இது போன்ற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இது ஒரு அதிகாரபூர்வமற்ற தகவல். தூத்துக்குடியில் தற்போது மீண்டும் அமைதி திரும்ப வேண்டும் என்பதே எங்களின் கருத்து. ஆலையை அரசு மூடிட அரசாணை வெளியிடப்பட்டு, ஆலைக்கு சீலும் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆலை மூடுவதற்கான அரசின் உத்தரவு அமலில் உள்ள நிலையில், எக்காரணம் கொண்டும் எங்களால் ஆலையை இயக்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!