வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (08/06/2018)

கடைசி தொடர்பு:11:15 (08/06/2018)

ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகள் ஒரிஜினலா? - சர்ச்சைக்கு பதில் அளிக்கும் வழக்கறிஞர்

குஜராத்திலிருந்து மீட்கப்பட்டவை ராஜராஜன், உலகமாதேவி  சிலைகள்தானா? என்பதுகுறித்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

ராஜராஜ சோழன்

தஞ்சைப் பெரியகோயிலில் வைக்கப்பட்டிருந்த ஆயிரம் ஆண்டுகள் பழைமையான மாமன்னர் ராஜராஜன், உலகமாதேவி சிலைகள் 60 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்து திருடப்பட்டு, குஜராத்தில் உள்ள தனியார் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தன. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல், அவற்றை மீட்டுக் கொண்டுவந்து மீண்டும் பெரியகோயிலுக்குள் வைத்தார். இந்நிலையில் 'இது ராஜராஜன் சிலை அல்ல' என இந்திய தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் நாகசாமி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சமூக ஆர்வலர் யானை ராஜேந்திரன், 'இவை ராஜராஜன் - உலகமாதேவி சிலைகள்தான்' என்பதற்கு ஏராளமான ஆதாரங்களை அடுக்குகிறார்.

இதுகுறித்துப் பேசிய அவர், ‘’தற்போது மீட்கப்பட்டிருப்பது சண்டிகேஸ்வரர் சிலையாக இருக்கலாம் என நாகசாமி உள்நோக்கத்துடன் திட்டமிட்டே பொய் சொல்கிறார். தற்போது மீட்கப்பட்டுள்ள ராஜராஜன் சிலையில், மன்னர்கள் மார்பில் அணியக்கூடிய அணிகலன்கள் உள்ளன. இதுபோன்ற அணிகலன்கள் தெய்வங்களுக்கு அணிவிப்பதில்லை. மீட்கப்பட்டுள்ள சிலையின் இடது காலில் வீரக்கழல் என்ற அணிக்கலன் உள்ளது. இது மன்னர்கள் மற்றும் போரில் வெற்றிபெற்ற வீரர்கள் அணியக்கூடியது. தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளபடி ராஜராஜசோழன் சிலையின் உயரம் 74 சென்டிமீட்டர். உலகமாதேவி சிலையின் உயரம் 53 சென்டிமீட்டர். தற்போது மீட்கப்பட்டுள்ள சிலைகளின் உயரமும் இதுவும் ஒன்றாக உள்ளது.

 தஞ்சை பெரிய கோயில்

டெல்லியில் 1999-ம் ஆண்டு, அணிசேரா நாடுகள் மாநாடு நடைபெற்றது. அப்போது வெளியிடப்பட்ட மலரில், குஜராத் கௌதம் சாராபாய் அருங்காட்சியகத்தில் இருப்பது ராஜராஜன், உலகமாதேவி சிலைகள்தான் என நாகசாமி குறிப்பிட்டுள்ளார். தொல்லியல் துறை பணியிலிருந்து 2006-ம் ஆண்டு ஓய்வுபெற்ற பிறகு, குஜராத் தனியார் அருங்காட்சியகத்தில் பணிக்குச் சேர்ந்த பின்பு, இது ராஜராஜ சோழன் சிலை இல்லை எனப் பொய் சொல்ல ஆரம்பித்தார். 2010-ம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஒரு குழு குஜராத் சென்றது. அப்போது, சிலையை மீட்க முடியாமல் போனதற்கு நாகசாமி தான் காரணம்” என்கிறார்.