வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (08/06/2018)

கடைசி தொடர்பு:12:10 (08/06/2018)

ஓமனில் சிறைப்பிடிக்கப்பட்ட 10 குமரி மீனவர்கள் 2 மாதத்துக்குப் பிறகு விடுவிப்பு!

ஓமன் நாட்டு கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட குமரி மாவட்ட மீனவர்கள் 10 பேர் இரண்டு மாதங்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்.

மன் நாட்டு கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட குமரி மாவட்ட மீனவர்கள் 10 பேர், இரண்டு மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்.

மீனவர்கள்

கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூர் புனித தோமையார் தெருவைச் சேர்ந்த ஆண்டனி சேவியருக்குச் சொந்தமான கவின் பிறைட் என்ற விசைப்படகில் ஆண்டனி சேவியர்,  ஆன்டோ ததேயூஸ், ஆரோக்கியம், சில்வெஸ்டர், பென்சிகர், அந்தோணிராஜ், சுனில், ஜோசப் பெஸ்கி, ஜாண் கிளிட்டஸ், அமல்ராஜ் ஆகிய 10 பேர், கடந்த ஏப்ரல் மாதம் 4-ம் தேதி கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். சூறைக்காற்று காரணமாக அவர்களது விசைப்படகு அதன் போக்கில் சென்றிருக்கிறது. காற்றின் வேகத்தில் சென்றதால், ஓமன் நாட்டு கடல் எல்லைக்குள் விசைப்படகு சென்றுவிட்டது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் 26-ம் தேதி, விசைப்படகு மற்றும் 10 மீனவர்களை ஓமன் நாட்டு கடல் படையினர் சிறைப்பிடித்தனர். இயற்கைச் சீற்றத்தில் அகப்பட்ட சம்பவத்தைத் தெரிவித்தும் மீனவர்கள் விடுதலைசெய்யப்படவில்லை. பின்னர் மத்திய, மாநில அரசுகளுக்கு  இதுகுறித்து கோரிக்கை வைக்கப்பட்டதைத் தொடர்ந்து மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவர் ஜஸ்டின் ஆண்டனி கூறுகையில், "ஓமனில் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும் விசைப்படகையும் மீட்க மத்திய, மாநில அரசுகளுக்கும் ஓமனிலுள்ள இந்திய தூதர், தொழிலாளர் நல அதிகாரி ஆகியோருக்கும் வேண்டுகோள் வைத்தோம். அரசின் முயற்சியால் மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். கடந்த மாதம் 26-ம் தேதியே அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கடல் கொந்தளிப்பு காரணமாக காத்திருந்த அவர்கள், விசைப்படகில் நேற்று இரவு ஓமனிலிருந்து கடல் மார்க்கமாகப் புறப்பட்டுவிட்டனர். இன்னும் ஒருசில நாள்களில் தூத்தூர் வந்து சேர்வார்கள். மீனவர்களின் விடுதலைக்கு உதவிய மத்திய, மாநில அரசுகளுக்கும், ஓமனில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க