'நீங்கள் முதல்வரா, மணல் குவாரி ஏஜென்டா?'- பழனிசாமியை விளாசும் கே.பாலகிருஷ்ணன்

'' 'எடப்பாடி முதலமைச்சரா அல்லது மணல் குவாரி உரிமையாளர்களுக்கான ஏஜென்டா' என்ற கேள்வி எழுகிறது. மணல் குவாரியைத் தடைசெய்யாவிட்டால், தூத்துக்குடி சம்பவம்போல இங்கேயும் அரங்கேறும்'' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

                                       


அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில், மணல் குவாரி அமைப்பதைத் தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்தி கொள்ளிடம் நீராதார பாதுகாப்புக் குழு சார்பில் ஏலாக்குறிச்சியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது, ''மணல் குவாரி அமைக்கப்பட்டதால் ஏற்படும் பாதிப்புகள்குறித்து கண்கூடாகப் பார்த்துவருகிறோம். புதிய வீராணம் திட்டத்துக்காக கொள்ளிடம் ஆற்றில் ஆழ்குழாய்க் கிணறு அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அத்திட்டம் ஜெயலலிதாவால் கைவிடப்பட்டது. இதை தமிழக அரசு நினைவில் கொள்ள வேண்டும். மணல் குவாரி அமைப்பது கட்டுமானத்துக்காகவா அல்லது கட்டுமானத் தொழிலாளர்களைப் பாதுகாக்கவா என்றால் இல்லை. வெளிநாட்டு மணலை விற்பனை செய்யத் தடைவிதிப்பதன் காரணம் என்ன? மணல் குவாரிக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடைவிதித்திருந்தபோது, அந்தத் தடைக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றம் வரை சென்று மணல் குவாரி அமைக்க அனுமதி பெற்றது. இதனால், எடப்பாடி தமிழக முதலமைச்சரா அல்லது மணல் குவாரி உரிமையாளர்களுக்கான ஏஜென்டா என்ற கேள்வி எழுகிறது'' என்று பேசினார். கூட்டத்தில் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 

                                   பாலகிருஷ்ணன்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே.பாலகிருஷ்ணன், தமிழகம் முழுவதும் தற்போதுள்ள எடப்பாடி அரசாங்கம் மணல் கொள்ளையை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறது. மணல் குவாரி அமைக்க உயர் நீதிமன்றம் தடைவிதித்த போதிலும், வெளிநாட்டு மணலை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என எடப்பாடி அரசிடம் பலமுறை வலியுறுத்தியும், வேறு பல்வேறு பிரச்னைகளுக்காக உச்ச நீதிமன்றம் வரை செல்லாத எடப்பாடி அரசாங்கம், மணல் குவாரி அமைக்கக் கூடாது என்பதற்குத் தடையாணை பெற்றுள்ளார்கள். மேலும், வெளிநாட்டு மணலை விற்பனைசெய்யவும் தடை ஆணை பெற்றுள்ளார்கள். இதன்மூலம், மணலை பகிரங்கமாகக் கொள்ளையடிப்பதிலேயே எடப்பாடி அரசாங்கம் செயல்பட்டுக்கொண்டுள்ளது. தூத்துக்குடி மக்களின் பிரச்னைகளை எடப்பாடி அரசு கவனிக்காததால், மிக மோசமான நிலை தூத்துக்குடியில் ஏற்பட்டது. எனவே, மக்களின் கோரிக்கையை ஏற்று மணல் குவாரியைத் தடை செய்யாவிட்டால், இங்கேயும் தூத்துக்குடி சம்பவம்போல ஒரு சம்பவம் ஏற்படும் நிலை உருவாகும்.

                              

அவ்வாறான நிலை உருவாக தமிழக அரசு இடம் தரக் கூடாது. அப்படியும் மணல் குவாரி அமைத்தே தீருவோம் என்றால், தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஒன்றுசேர்ந்து போராடவும் தயாராக உள்ளோம். தற்போது, பல்வேறு மாநிலங்களில் மணல் குவாரி இல்லை. மேலும், மணலுக்குப் பதிலான எம்சாண்ட் மணல் மற்றும் வெளிநாட்டு மணல் என்று இருக்கும்போது, இயற்கையாக அமைந்துள்ள மணலைக் கொள்ளையடித்து, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நீராதாரத்தை ஏன் பாதிக்கவைக்க வேண்டும்? எனவே, கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கக் கூடாது'' என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!