வெளியிடப்பட்ட நேரம்: 12:56 (08/06/2018)

கடைசி தொடர்பு:14:48 (08/06/2018)

`மதரீதியான வேறுபாடு நாட்டைச் சிதைத்துவிடும்’ - ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் அதிர்ந்த பிரணாப்

''மதரீதியான வேறுபாடு மற்றும் வெறுப்புணர்வு ஆகியவை நம் நாட்டைச்  சிதைத்துவிடும்'' என ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் பங்கேற்ற பிரணாப் முகர்ஜி  தெரிவித்துள்ளார்.

பிரணாப்


மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில், நேற்று பயிற்சி வகுப்புகள் நிறைவடையும் விழா நடைபெற்றது. இதில், முன்னாள்  குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிரணாப்  முகர்ஜி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். பிரணாப் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கூடாது என பல காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  ஆனால், அத்தனை எதிர்ப்புகளையும் மீறி அவர் இந்தக் கூட்டத்தில்  கலந்துகொண்டார். நேற்று காலை நாக்பூர் வந்த அவரை ஆர்.எஸ்.எஸ்  அமைப்பின் தலைவர் நேரில் சென்று வரவேற்றார்.

அதன்பின், நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரணாப் முகர்ஜி, “நான்  தேசம், தேசியவாதம், தேசப்பற்று ஆகிய தலைப்பில் என்னுடைய கருத்துகளைப்  பகிர்ந்துகொள்ள உள்ளேன். நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு, நம் தேசம் ஒன்றுபட்டுள்ளது. ஒரு நாட்டின் மொழி மற்றும் கலாசாரத்தை வைத்தே அந்நாட்டின்  அடையாளம் நிர்மானிக்கப்படுகிறது. மதரீதியான வேறுபாடு, வெறுப்புணர்வு ஆகியவை நம் நாட்டைச் சிதைத்துவிடும். நாம் வேற்றுமையில் ஒற்றுமையுடன்  வாழ வேண்டும். சகிப்புத்தன்மை நம் பலத்தை அதிகரிக்கும். நமது நாட்டில் பல  மொழிகள், பல்வேறுபட்ட மக்கள் வாழ்கின்றனர் என்பதை நினைக்கும்போது  மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. பல்வேறு முஸ்லிம்  ஆட்சியாளர்களுக்குப் பிறகும்கூட நமது கலாசாரம் அப்படியே நிற்கிறது.  அனைத்து  மதத்தைச் சேர்ந்தவர்களும் ஒன்றிணைந்து செயல்படுவதே தேசியவாதம் என நாட்டின்  முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்'' என்று கூறினார்.