வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (08/06/2018)

கடைசி தொடர்பு:13:15 (08/06/2018)

குற்றாலத்தில் சீசன் தொடங்கியது - ஐந்தருவியில் வெள்ளம்; உற்சாகத்தில் சுற்றுலாப் பயணிகள்!

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையின் காரணமாக குற்றாலத்தில் சீசன் தொடங்கியுள்ளது. அருவிகளில் தண்ணீர் விழத் தொடங்கியதால், சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை காரணமாக, குற்றாலத்தில் சீசன் தொடங்கியுள்ளது. அருவிகளில் தண்ணீர் விழத் தொடங்கியதால், சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

குற்றாலத்தில் சீசன்

கேரளாவில், தென்மேற்குப் பருவமழை தொடங்கிவிட்டது. இதனால், மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக, நெல்லை மாவட்டம் செங்கோட்டை, தென்காசி, குற்றாலம் பகுதிகளில் சாரல் மழை பெய்துவருகிறது. வெயில் இல்லாமல் இதமான சூழலுடன் தென்றல் காற்று வீசுவதாலும்,  அருவிகளில் தண்ணீர் கொட்டத் தொடங்கி இருப்பதாலும் மக்கள் உற்சாகமாக உள்ளனர்.

குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் நேற்று மாலை முதலாகவே தண்ணீர் கொட்டியது. குளுமையான சீதோஷ்ணநிலையுடன் அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால், சீசனுக்காக மட்டும் திறக்கப்படும் தற்காலிகக் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டுவிட்டன. அத்துடன், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. சீசன் தொடங்கியிருப்பதால், பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது.

குறிப்பாக, சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கான பேரூராட்சி சுற்றுலா அறைகளில் பராமரிப்புப் பணிகள் முடிவடைந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஐந்தருவில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவிலும் பணிகள் அனைத்தும் முடித்துவைக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில், சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக குற்றாலம் தயார்நிலையில் உள்ளது.  இதனிடையே, ஐந்தருவில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.