`சின்னாபின்னமாகிவிட்டேன்’ - ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் முன்பு குமுறிய அ.தி.மு.க சீனியர் | ADMK senior complaint with paneerselvam, edappadi palaisamy

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (08/06/2018)

கடைசி தொடர்பு:13:30 (08/06/2018)

`சின்னாபின்னமாகிவிட்டேன்’ - ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் முன்பு குமுறிய அ.தி.மு.க சீனியர்

  அதிமுக

``சின்னா, பின்னமாக்கப்பட்டு உங்களுடைய தொண்டனாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்’ என்று  அ.தி.மு.க சீனியர் தமிழ்மகன் உசேன், ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் முன்பு தன்னுடைய மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். 

அ.தி.மு.க சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று நடந்தது. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி  மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் கட்சியின் சீனியர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ரம்ஜான் குறித்த தகவல்களைப் பேசினர். நன்றியுரையில் `அ.தி.மு.க-வின் சீனியரான தமிழ்மகன் உசேன், மூன்றெழுத்து என்று பேசத் தொடங்கினார். ஈ.வே.ரா மூன்றெழுத்து, காஞ்சி என்ற மண்ணிலிருந்து வந்த அண்ணா மூன்றெழுத்து, எம்.ஜி.ஆர் மூன்றெழுத்து, அம்மா மூன்றெழுத்து, ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் மூன்றெழுத்து, சிவன், இயேசு, அல்லா, பைபிள், குரான், நன்றி ஆகியவையும் மூன்றெழுத்து. நான் பிறந்த குமரி மூன்றெழுத்து என்று பேசியவர், இந்த இயக்கத்தில் இணைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்னும் சாதாரண தொண்டனாகவே இருந்துவருகிறேன். கடந்த 1967-ம் ஆண்டில் காலடி எடுத்து வைத்து சின்னா பின்னமாக்கப்பட்டு உங்களுடைய தொண்டனாகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். எனக்கு இந்த இயக்கம்தான் பெரிது' என்று பேசினார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கட்சி நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலையில் தமிழ்மகன் உசேன் மனம்திறந்து பேசியது, பரபரப்பை ஏற்படுத்தியது.