வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (08/06/2018)

கடைசி தொடர்பு:14:00 (08/06/2018)

‘எங்களுக்கு யாரும் எதிரி அல்ல’- ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் மோகன் பகவத்

''ஆர்.எஸ்.எஸ் என்பது ஒரு குறிப்பிட்ட அமைப்பினருக்கானது மட்டுமல்ல. இதில்  பங்கேற்க பல்வேறு தரப்பு மக்களையும் நாங்கள் அழைக்கிறோம்'' என ஆர்.எஸ்.எஸ்  தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

மோகன் பகவத்

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி வகுப்பு நிறைவு விழா நடைபெற்றது. அதில், முன்னாள் குடியரசுத்தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் பங்கேற்றது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு, பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பிரணாப் முகர்ஜியின் மூத்த மகள் சர்மிதா முகர்ஜி போன்ற பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அத்தனை எதிர்ப்புகளையும் மீறி, நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பங்கேற்றார். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், “ஆர்.எஸ்.எஸ் என்பது ஒரு குறிப்பிட்ட அமைப்பினருக்கானது மட்டுமல்ல. நாங்கள், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இதில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கிறோம்.  நாங்கள் யாரையும் எதிரியாகப் பார்க்கவில்லை. நம் நாடு பல மொழி, மதங்களைக் கொண்டது. நாங்கள் அனைத்தையும் மதிக்கிறோம். அனைவரின் கருத்துகளையும் நாங்கள் ஏற்கிறோம். நேர்மறையான மற்றும் எதிர்மறையான கருத்துகள் குறித்து நாங்கள் நிச்சயம் விவாதிப்போம். இந்த விழாவுக்கு பிரணாப் முகர்ஜி அழைக்கப்பட்டது ஒன்றும் ஆச்சர்யமான விஷயம் இல்லை. இதுவரை நடந்த எங்கள் நிகழ்ச்சிகளில், பல்வேறு தலைவர்களும் வந்து கலந்துகொண்டுள்ளனர். பல்வேறு தரப்பினரை அழைப்பது எங்களின் மரபு. அவர்கள் இங்கு வந்து பேசும்போது, அதில் சிறந்த விஷயங்கள் ஏதேனும் இருந்தால் நாங்கள் அதைப் பின்பற்ற முயல்வோம். பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதுகுறித்து நடத்தப்பட்ட விவாதங்கள் தேவையற்றது” எனக் கூறினார்.