வெளியிடப்பட்ட நேரம்: 13:42 (08/06/2018)

கடைசி தொடர்பு:13:42 (08/06/2018)

எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி பயணம் ஏன், கண் கெட்டபின் சூரிய நமஸ்காரமா?

எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி பயணம் ஏன், கண் கெட்டபின் சூரிய நமஸ்காரமா?

மே 22... தமிழகத்தின் தென் மாவட்டமான தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூட வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு, கலெக்டர் அலுவலகத்தை நோக்கிச் சென்றபோது கலவரம் வெடித்தது. வன்முறையில் ஈடுபட்டவர்களைத் தடுப்பதாகக் கூறிக்கொண்டு, தமிழக காவல்துறை கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள் உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஸ்டெர்லைட் போராட்டம்

ஒட்டுமொத்தத் தமிழகமும், ஆளும்கட்சி தவிர அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். மாநிலம் முழுவதும் ஒரு பதற்றமான நிலையுடன் அல்லோகலப்பட்டது. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த அரசு மருத்துவமனையின் முன்பு, சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்கள் கூடியிருந்தனர். உடல்களை வாங்க மறுத்து மறியலில் ஈடுபட்ட நிலையில், அப்போதும் துப்பாக்கிச்சூடு  நடவடிக்கையில் இறங்கியது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு.  

தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மறியல் நடைபெறுவதற்கு முந்தைய நாள் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு, ஒருவாரம் வரை நீட்டிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் போலீஸாரின் தடியடியிலும், துப்பாக்கிச்சூட்டிலும் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஏன், இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரும் உண்டு.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் அடுத்த நாளே தூத்துக்குடிக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர். ஒட்டுமொத்த தமிழகத்தையும் பதற்றத்துக்கு ஆளாக்கிய இந்தச் சம்பவத்தில், மக்களிடையே கடும் கொந்தளிப்பு எழுந்ததை உணர்ந்த, எடப்பாடி அரசு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியை ரத்து செய்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தது. இனி ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது என்று அறிவித்ததுடன், மக்களின் போராட்டத்தை சிலர் திசைதிருப்பி, வன்முறையைத் தூண்டியதாலேயே போலீஸார் நடவடிக்கையில் இறங்கினர் என்று துப்பாக்கிச்சூட்டுக்கு நியாயம் கற்பித்தார் எடப்பாடி பழனிசாமி. மேலும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதற்கு உரிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதுவே போதுமானது. இனிமேல் இந்த ஆலையை யாரும் திறக்க முடியாது என்று சட்டசபையிலும் அறிவித்தார்.

ஸ்டெர்லைட் போராட்டம்

'காலா' நாயகன் ரஜினிகாந்த், கடந்த சில தினங்களுக்கு முன் தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்த பின் அளித்த பேட்டியில், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடையே சமூக விரோதிகள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார். அது எப்படி உங்களுக்குத் தெரியும் என்று கேட்டதற்கு உரிய பதில் இல்லை. சமூக விரோதிகளை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இரும்புக்கரம் கொண்டு அடக்கினார் என்றும், அதுபோன்ற இப்போதைய தமிழக அரசும் செய்ய வேண்டும் என்றும் கூறினார். துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த நாளில், தமிழக அரசைக் கண்டித்த ரஜினி, 10 நாள்களுக்குள் தன் நிலைப்பாட்டை 'காலா' ரிலீஸ்-க்கு ஏதுவாக மாற்றிக் கொண்டாரோ என்று பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

சிறிய கட்சிகளின் தலைவர்களும்கூட தூத்துக்குடி சென்று வந்த பின்னர், காலம் கடந்து அதாவது 15 நாள்களுக்குப் பின்னர், மக்களின் கோபம் குறைந்திருக்கும் என்ற அடிப்படையில், துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் (?!) கூறுவதற்காகச் செல்லவிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ஜூன் 9-ம் தேதி  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி செல்லவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 13 பேர் கொல்லப்பட்டு, 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், தடை உத்தரவு இருப்பதால்தான் தான் அங்கு செல்லவில்லை என்று முதல்வர் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார். மே 28-ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர். ஆனால், முதல்வர் சம்பவ இடத்துக்குச் செல்லாதது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. 

எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில், நாளை தூத்துக்குடி செல்லும் எடப்பாடி பழனிசாமி, காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களைச் சந்தித்து  ஆறுதல் கூறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

13 பேரை பலி வாங்கக் காரணமாக இருந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடும் முடிவை, 20 நாள்களுக்கு முன்பே அரசு எடுத்திருந்தால், இந்தப் போராட்டமே வெடித்திருக்காது. அதையும் காலம்கடந்தே அரசு எடுத்தது. தவிர, ஒட்டுமொத்த தமிழக மக்களும் தமிழக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கும் நிலையில், தற்போது கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் என்ற அடிப்படையில், தூத்துக்குடிக்குச் செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

தமிழகத்தின் தென்கோடி நகரமான தூத்துக்குடி மக்கள், இன்னமும் கொதிப்பில்தான் உள்ளார்களா என்பதை அறிந்துவரச் செல்கிறாரா என்ற கேள்வி தற்போது எழுகிறது. வேதாந்தா குழுமம், மத்தியில் ஆளும் பி.ஜே.பி-க்கு பல கோடி ரூபாய் நன்கொடை வழங்கியிருப்பதாக வெளியாகும் தகவல்களின் அடிப்படையில், மத்திய அரசின் தூண்டுதலின் பேரில் தமிழக அரசு, போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காக நடத்தப்பட்ட தாக்குதலாகவே மே 22-ம் தேதி துப்பாக்கிச்சூடு பலராலும் அறியப்படுகிறது. 

ஸ்டெர்லைட் போராட்டம் - தூத்துக்குடி

நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கலாம். எனினும், தமிழக அரசின் ஆணையை எதிர்த்து ஆலை நிர்வாகம் நீதிமன்றத்தை நாடி, மீண்டும் திறப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவே எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துகொண்டிருக்கின்றன. 

அப்படி இருக்கும்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பயணம், தூத்துக்குடி மக்களின் ரணத்துக்கு மருந்தாக அமையுமா என்பது சந்தேகமே. தவிர, இரு வாரங்களுக்குப் பின்னர், மத்திய அரசிடம் இருந்து பச்சைக்கொடி கிடைத்த பிறகே, நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கிறாரா என்ற சந்தேகமும் தூத்துக்குடி மக்கள் மட்டுமல்லாது, மாநிலம் முழுவதும் உள்ள மக்களிடையே எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

எடப்பாடியின் விசிட் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாமல் இருந்தால் சரி...!?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்