Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

`ஸ்டாலின்; பாரதிராஜா; திருமாவளவன்; சீமான்!' - கராத்தே தியாகராஜனின் `காலா’ அறிக்கை பின்னணி

கராத்தே தியாகராஜன்

`காலா’ படம் குறித்து காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன் வெளியிட்ட அறிக்கை, அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்திருக்கிறது. `ரஜினியை இயக்குவது பா.ஜ.க-தான் எனப் பிரசாரம் செய்து வந்ததில் தி.மு.க-வுக்குப் பெரிய பங்கு உண்டு. ஸ்டாலினை விமர்சிக்கும் வகையிலேயே இப்படியோர் அறிக்கையை வெளியிட்டார்' என்கின்றனர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள். 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்துள்ள `காலா' திரைப்படம், ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. `காலா' முன்வைக்கும் அரசியல், சமூக வலைதளங்களிலும் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நேற்று சத்யம் திரையரங்கில் ரஜினியின் மனைவி லதா உட்பட குடும்பத்தினருடன் `காலா' படம் பார்த்தார் கராத்தே தியாகராஜன். இதன் பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில், `தமிழக அரசியலைப் பொறுத்தமட்டில் யார், யாரெல்லாம் கடும் எதிர்ப்புகளுக்கு ஆளானார்களோ அவர்கள் எல்லாம் மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். மறைந்த எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வைத் தொடங்கிய காலத்தில் அவரது சினிமா செல்வாக்கையும் மீறி அவருக்குப் பலவிதமான எதிர்ப்பு அலைகள் காணப்பட்டன. அந்த நேரத்தில் தயாராகிக்கொண்டிருந்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் நம்பிக்கைகளையும் ஏற்படுத்தியிருந்தது. பலவிதமான தடைகளை மீறி படம் வெளியாகி இமாலய வெற்றியைப் பெற்றவுடன் அசைக்க முடியாத தலைவர் ஆனார் எம்.ஜி.ஆர். அதேபோல், ஏராளமான எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் முறியடித்து இன்றைக்கு வெளியான ரஜினிகாந்த்தின் ‘காலா’ திரைப்படம் உலகளாவிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. தனிமனித நேர்மை, குடும்ப பாசம், மனிதநேயம், தன்னலமற்ற பொதுச்சேவை போன்ற அனைத்து அம்சங்களையும் கொண்ட படமாகக் காலா வெளிவந்துள்ளது. 

ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசம் குறித்து, கேள்வி எழுப்பியவர்கள் சில்லுண்டித்தனமான சில்மிஷங்களில் ஈடுபட்ட சினிமாக்காரர்கள், செல்லாக்காசாகிப்போன அற்ப சிந்தனையாளர்கள் இப்படி எல்லோரின் முகத்திலும் கொதிக்கின்ற தார் பூசி துடிக்க வைத்திருக்கிறது ‘காலா’. தாத்தாக்கள் முதல் சிறுவயது குழந்தைகள் வரை அனைவரையும் ஓரணியில் திரட்டி கரைகாணாத மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்திருக்கிறது காலா. ரஜினிகாந்த் அரசியலுக்குத் தகுதியற்றவர் என்பது போலவும் செல்வாக்கு இழந்தவர் என்றும் தாக்குப்பிடிக்க மாட்டார் என்றும் பச்சையாகவும் கொச்சையாகவும் விமர்சித்து வந்தவர்களின் வாயில் ஆசிட்டை ஊற்றி இருக்கிறது, மொழி, இன, உணர்வுகளைத் தூண்டிவிட்டு ரஜினிகாந்த்தை மக்களிடமிருந்து தனிமைபடுத்த நினைத்த குள்ளநரிகளின் சூழ்ச்சி இந்தநாளில் முறியடிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடக்கம்தான். இனிவரும் எழுச்சியை யாராலும் எதிர்கொள்ள இயலாது என்பதே ஜூன் 7-ம் தேதி எடுத்துக்காட்டும் உணர்ச்சிகரமான அறிவிப்பு' எனக் காட்டமான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தார். 

கராத்தே தியாகராஜனின் அறிக்கை குறித்து நம்மிடம் பேசிய ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய நிர்வாகி ஒருவர், "ரஜினியின் நீண்டகால நண்பர் கராத்தே தியாகராஜன். இப்படியோர் அறிக்கையை வெளியிடுவது குறித்து, ரஜினியின் அனுமதியை அவர் பெறவில்லை. அறிக்கையைக் காட்டியிருந்தால், இதை வெளியிடுவதற்கு ரஜினி சம்மதம் தெரிவித்திருப்பாரா என்பது வேறு விஷயம். அதேநேரம், கடந்த சில வாரங்களாக அரசியல்ரீதியாக ரஜினியை, சில கட்சிகளின் தலைவர்கள் விமர்சிப்பதை கராத்தே தியாராஜன் விரும்பவில்லை. இந்த அறிக்கையில், ஸ்டாலின், பாரதிராஜா, சீமான், திருமாவளவன் என அனைவரையும் ஒருசேர மையப்படுத்தி விமர்சித்திருக்கிறார். சீமானைப் பொறுத்தவரையில் தமிழர் என்ற அடிப்படையில் ரஜினியை எதிர்க்கிறார். மற்றவர்களோ, 'ரஜினி பா.ஜ.க-வின் ஆள்' எனப் பிரசாரம் செய்கிறார்கள். இப்படிப் பிரசாரம் செய்வதற்குக் காரணம், `கிறிஸ்து, முஸ்லிம் வாக்குகள் ரஜினி பக்கம் சென்றுவிடக் கூடாது' என்பதுதான்" என்றவர் மேலும் தொடர்ந்தார், 

ஸ்டாலின்

"ஸ்டாலின்மீது கராத்தே தியாகராஜனின் கோபத்துக்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. கடந்த சட்டசபைத் தேர்தலில், `மயிலாப்பூர் தொகுதியில் தன்னுடைய தோல்விக்கு ஸ்டாலினும் தி.மு.க-வின் இரண்டாம்கட்டத் தலைவர்களும்தான் காரணம்' என அவர் நினைக்கிறார். தி.மு.க-வைவிட்டு வைகோ வெளியேறியபோது, 94-ம் ஆண்டு நடந்த மயிலை இடைத்தேர்தலில் ம.தி.மு.க-வை நான்காம் இடத்துக்குத் தள்ளியதில் கராத்தேவின் பங்கு அதிகம். மயிலை தொகுதியில் கணிசமான செல்வாக்கை வளர்த்து வைத்திருக்கிறார். ஆனாலும், `அவர் வெற்றி பெற்றுவிடக் கூடாது' என்பதில் தி.மு.க-வினர் சிலர் உறுதியாக இருந்தனர். அந்தக் கோபத்தைதான் `காலா' வடிவில் வெளியிட்டிருக்கிறார் கராத்தே. வரும் காலங்களில் தமிழக அரசியல், ரஜினியை மையப்படுத்தி நடப்பதற்காக வாய்ப்புகள் அதிகம். அப்போது, `ரஜினியுடன் இருப்பது வெற்றியைத் தரும்' எனவும் உறுதியாக நம்புகிறார் கராத்தே தியாகராஜன்" என்றார் விளக்கமாக. 

"கராத்தே தியாகராஜனைப் பொறுத்தவரையில், மூப்பனார் தலைமையை ஏற்று செயல்பட்டு வந்தார். அ.தி.மு.க உட்பட வேறு சில கட்சிகளுக்கு கூடாரத்தை மாற்றினாலும், ரஜினியோடு தொடக்கத்தில் இருந்தே நட்பு பாராட்டி வருகிறார். ரஜினியின் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொள்வதில் பா.ஜ.க தலைமை முனைப்புகாட்டி வருகிறது. இதை உண்மையாக்கும் வகையில், 'பா.ஜ.க மடியில் ரஜினி விழுந்துவிடக் கூடாது' எனக் காங்கிரஸ் தலைமைக்கு அண்மையில் தெரியப்படுத்தினார் திருநாவுக்கரசர். இதே கருத்தில் ப.சிதம்பரமும் உறுதியாக இருக்கிறார். `வரக்கூடிய தேர்தல்களில் ரஜினியைக் கையில் எடுப்பதே நமக்குப் பயன்தரும்' எனச் சிதம்பரத்தின் ஆதரவாளரான கராத்தேவும் நினைக்கிறார். அதன் ஒருபகுதியாகத்தான் இப்படியொரு காட்டமான அறிக்கை வெளியானது" என்கின்றனர் சத்தியமூர்த்திபவன் வட்டாரத்தில்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement