வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (08/06/2018)

கடைசி தொடர்பு:14:20 (08/06/2018)

கூவிக் கூவி கழுதைப் பால் விற்பனை- வாங்குவதற்குப் படையெடுத்த கிராம மக்கள்

கழுதையுடன் ஊர் ஊராக சென்று "கழுதைப் பால்", "கழுதைப் பால்" எனக் கூவி, கூவி விற்பனை செய்கின்றனர். கேட்பவர்களுக்கு அங்கேயே உடன் சுட, சுட கறந்து தருகின்றனர்

கடலூர் மாவட்டம், விருத்தாசலம்  மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மருத்துவ குணம் கொண்ட கழுதைப் பால் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கழுதையுடன் ஊர் ஊராகச் சென்று, 'கழுதைப் பால்', 'கழுதைப் பால்' எனக் கூவிக் கூவி விற்பனை செய்கின்றனர். கேட்பவர்களுக்கு அங்கேயே  சுடச்சுட கறந்து தருகின்றனர். கழுதைப் பால், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. மருத்துவ குணம் கொண்டது என கிராம மக்கள் கூறுகின்றனர்.

கழுதைப் பால் குடித்தால் சளி, இருமல், கரப்பான் நோய், மஞ்சள் காமாலை, பித்தம் உட்பட பல்வேறு நோய்கள் தீர்ந்துவிடும் எனக் கூறி,  கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் கழுதையுடன் தெருத் தெருவாகச் சென்று, சிலர் வியாபாரம் செய்துவருகின்றனர். கிராம மக்களும் ஆர்வமுடன் வாங்கி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடித்துவருகின்றனர். 

கழுதைப் பால் விற்கும் வியாபாரி

இதுகுறித்து கழுதைப் பால் விற்பனை செய்யும் ராமரிடம் கேட்டபோது, '' 'அழுத பிள்ளைக்கு கழுதைப்பால் கொடு' என்ற வழக்கு சொல் கிராமப்புறங்களில் உண்டு. கழுதைப் பால் மருத்துவ குணம் கொண்டது. இதைக் குடித்தால் சளி, இருமல், கரப்பான் உட்பட பல்வேறு நோய்கள் குணமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம். ஒரு பாலாடை( சங்கு)  அளவு 50 ரூபாய்க்கும், 50 மில்லி 250 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறோம். சிறிய குழந்தைகள் என்றால் ஒரு சங்கு அளவு போதுமானது. பெரியவர்களுக்கு 50 மில்லி கொடுக்க வேண்டும். நாங்கள் பால் விற்பனைக்காகவே கழுதை வளர்கிறோம். கழுதையை நேரிடையாக கிராமப் பகுதிகளுக்குக்
 கொண்டுசென்று, கலப்படம் இல்லாமல் அங்கேயே கறந்து விற்கிறோம். விருத்தாசலம், திட்டக்குடி பகுதியிலிருந்து, 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள்  தமிழகம் முழுவதும் சென்று விற்பனை செய்துவருகிறோம்'' என்கிறார். 

கழுதைப் பால்

இதுகுறித்து விருத்தாசலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சுவாமிநாதனிடம் கேட்டபோது, ''கழுதைப் பால் குடித்தால் குழந்தைகளுக்கு நல்லது. குரல் வளம் நன்றாக இருக்கும் என்று கூறப்படுவது முற்றிலும் தவறான கருத்து. கழுதைப் பாலை குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது. இதனால், குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறையும். குழந்தைகளுக்கு செரிமான சக்தி குறைவு என்பதால், செரிமானக் கோளாறுகள்  ஏற்படும்.  உடல் வலிமை பாதிக்கப்படும். அதனால் குழந்தைகளுக்கு தாய்ப் பால் தவிர வேறு எந்தப் பாலும் கொடுக்கக் கூடாது'' என்கிறார்.