வெளியிடப்பட்ட நேரம்: 13:17 (08/06/2018)

கடைசி தொடர்பு:14:03 (08/06/2018)

பிரதமர் மோடியைக் கொல்ல சதியா?- சிக்கிய மாவோயிஸ்ட் கடிதத்தில் அதிர்ச்சித் தகவல்

பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்ல மாவோயிஸ்ட்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர்

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் உள்ள பீமா கோரோகான் என்ற கிராமத்தில் கோரோகான் போரின் 200-வது ஆண்டு விழா கடந்த ஜனவரி 1-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்காக பட்டியலின மக்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் திடீரென கல் வீசித் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இதனால் அமைதியாகத் தொடங்கிய கூட்டம் கலவரமாக மாறியது. இந்தக் கலவரத்தில் பல வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இதைத்தொடர்ந்து, மகாராஷ்ட்ராவின் பல்வேறு பகுதிகளில் இந்த கலவரத்தைக் கண்டித்து போராட்டங்களும் கடையடைப்புகளும் நடத்தப்பட்டன. 

இந்தக் கலவரம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்தக் கலவரத்துக்கு மாவோயிஸ்டுகள் சதியாக இருக்கலாம் எனக் கருதிய மகாராஷ்ட்ரா காவல்துறையினர், இதில் சம்பந்தப்பட்ட 5 பேரை கைது செய்தனர். அதில் ஒருவரை டெல்லியிலும் மற்ற நான்கு பேரை புனேவிலும் கைது செய்தனர். டெல்லியில் கைது செய்யப்பட்டவரின் வீட்டில் சோதனை நடத்திய போலீஸாருக்கு சில கடிதங்கள் கிடைத்துள்ளன. அந்தக் கடிதத்தில், ‘ராஜீவ் கொலை போன்ற மற்றொரு நிகழ்ச்சி’ என்றும்  சில ஆயுதங்கள் வாங்குவது தொடர்பான தகவல்களும் எழுதியிருந்ததாக மகாராஷ்ட்ரா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இது பிரதமர் தொடர்புடைய விஷயம் என்பதால், கடிதம் மற்றும் கைது செய்யப்பட்டவரின் வீட்டில் கிடைத்த தகவல்கள் அனைத்தையும் உளவுத்துறைக்கு அனுப்பியுள்ளனர்.