வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (08/06/2018)

கடைசி தொடர்பு:14:40 (08/06/2018)

கார் பருவ சாகுபடிக்காக மணிமுத்தாறு அணையில் தண்ணீர் திறப்பு!

கார் பருவ சாகுபடிக்காக நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையிலிருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. 105 நாள்களுக்குத் திறக்கப்படும் தண்ணீரால் 2,756 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

கார் பருவ சாகுபடிக்காக நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையிலிருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. 105 நாள்களுக்கு திறக்கப்படும் தண்ணீரால் 2,756 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. 

மணிமுத்தாறு அணையில் நீர் திறப்பு

கார் பருவ சாகுபடிக்காக மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கக் கோரி பெருங்கால் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ், அணையிலிருந்து தண்ணீர் திறந்தார். 

118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் தற்போது 73 அடி நீர் இருப்பு உள்ள நிலையில், அணையிலிருந்து விநாடிக்கு
45 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பெருங்கால் பாசனத்துக்கு உட்பட்ட ஜமீன் சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, தெற்குக் கல்லிடைக்குறிச்சி, பாப்பன்குளம், மூலச்சி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2,756 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும். 

தண்ணீர் திறந்து வைத்த பின்னர் பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ், ``மணிமுத்தாறு அணையிலிருந்து 105 நாள்களுக்கு தேவைக்கு ஏற்ப தண்ணீர் திறந்துவிடப்படும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி பயன்பெற்றுக்கொள்ள வேண்டும். பாபநாசம் அணையில் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. அது பற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.