வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (08/06/2018)

கடைசி தொடர்பு:15:20 (08/06/2018)

50,000 தொழில் நிறுவனங்கள் மூடல்; 5 லட்சம் பேர் வேலை இழப்பு! - அதிர்ச்சியை ஏற்படுத்திய தமிழக அரசு

தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 50,000 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், கடந்த ஓராண்டில் 50,000 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

தமிழக அரசு

சட்டப்பேரவை கூட்டத்தொடர், கடந்த 29-ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில், தொழில்துறை மானியக் கோரிக்கையின்போது அரசு தாக்கல்செய்த கொள்கை விளக்கக் குறிப்பில், 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்மூலம் பல்வேறு பெரு நிறுவனங்களுக்குத் தேவையான உதிரிப்பாகங்கள் தயாரிக்கப்பட்டுவருகின்றன. அதுமட்டுமின்றி, பிளாஸ்டிக், ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களும் சிறு குறு தொழில்கள்மூலம் உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது. இதனால், பல ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில், தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில், 2007-2008-ம் ஆண்டில் 27,209 என்ற அளவில் இருந்த சிறு குறு தொழில் நிறுவனங்களின்மூலம் 2,547.14 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு 8,739.95 கோடி அளவில் பொருள்கள் உற்பத்திசெய்யப்பட்டுவந்தன. இதனால், 2,42,855 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து பயன்பெற்றனர். உத்யோக் ஆதார் பதிவறிக்கை அமல்படுத்தப்பட்ட பிறகு, 2016-17 ஆண்டில் சிறு குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, 2,67,310 என்ற அளவுக்கு உயர்ந்தது.  இதனால், 36,000 கோடி அளவுக்கு முதலீடு அதிகரித்து 18,97,619 பேர் வேலைவாய்ப்பு பெற்றனர். ஆனால், 2017-18-ம் ஆண்டைப் பொறுத்தவரை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2,17,981 என்ற அளவுக்குக் குறைந்து, முதலீடும் 25,000 கோடிக்கு சரிந்துள்ளது. இதனால், வேலைவாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கை 13,78,544 ஆக குறைந்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் கடந்த ஓராண்டில் ஏறக்குறைய 50,000 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதும் அதன்மூலம் 5லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டதும் தெளிவாகிறது.