`அரசியலிலும் இவர்கள் இணையணும்' - காலா வெற்றியை ரஜினி ரசிகர்களுடன் கொண்டாடிய கமல் ரசிகர்கள்

ரஜினியும் கமலும் அரசியலில் ஒன்றாக இணைய வேண்டும் என இருதரப்பு நிர்வாகிகளும் பேசி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரஜினி ரசிகர்களுடன் கொண்டாடிய கமல் ரசிகர்கள்

ரஜினியும் கமலும் அரசியலில் கொள்கைரீதியாக மிகவும் மாறுபட்டு இருக்கிறார்கள். ரஜினியின் பேச்சுக்களை பல சமயங்களில் நேரடியாகவே விமர்சனம் செய்துவருகிறார்  நடிகர் கமல். இது ஒருபுறம் இருக்க நேற்று வெளியான 'காலா' படத்தை வரவேற்கும் விதமாக ரஜினியின் மக்கள் மன்ற  நிர்வாகிகள், மக்கள் நீதி மய்யத்தின்  நிர்வாகிகள் எனப் பல நடிகர்கள் கூடி கேக் வெட்டி கொண்டாடியதோடு ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டு வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். இந்த நட்பு, நம் இரு தலைவர்களுக்கும் அதுவும் அரசியலில் இணைந்து இதேபோல தொடர வேண்டும் என  அப்போது இரு தரப்பு ரசிகர்களும் பேசிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே  வெளியான ரஜினியின் 'காலா' படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தஞ்சாவூர் முழுவதும் எங்க கொடி எப்பவும் உயரதான் பறக்கும். வள்ளல், ஆளப் பிறந்தவன் என ரஜினியின் அரசியல் என்ட்ரியைக் குறிக்கும் வகையில் ஃப்ளெக்ஸ் வைக்கப்பட்டிருந்தது. பின்னர், நேற்று காலை படம் தொடங்குவதற்கு முன், ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர் ரஜினி கணேசன், மக்கள் நீதி மையத்தின் மாவட்டச் செயலாளர் தரும. சரவணன், விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் விஜய் சரவணன் மற்றும் அஜித் மன்ற  நிர்வாகிகள் என எல்லோரும் ஒன்றாக தியேட்டருக்கு முன் கூடினர்.

முன்னதாக, காலா படம் நன்றாக ஓடுவதற்காக ரஜினியின் படத்துக்கு முன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், ரஜினி கணேசன் கேக்கை வெட்டி மக்கள் நீதி மையத்தின் பொறுப்பாளருக்கு ஊட்டிவிட, பதிலுக்கு அவரும் ஊட்டி விட்டார். இதேபோல எல்லா நிர்வாகிகளும் கேக் ஊட்டிக்கொண்டு தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து, மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். அப்போது பேசிய சிலர், ரஜினியும் கமலும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும்  அரசியலுக்கு வந்த பிறகு கொள்கைரீதியாக மாறுபட்டு இருக்கிறார்கள். ரஜினி ஆன்மிக அரசியல் செய்வேன் என்றார். திராவிடம் இல்லாமல் இங்கு எதையும் செய்ய முடியாது என்றார் கமல். தொடர்ந்து போராட்டங்கள் நடத்தினால், தமிழகம் சுடுகாடாகும் என்றார் ரஜினி. போராடாமல் இங்கு எதுவும் கிடைக்காது என்றார் கமல். அரசியலில் என் கொள்கை வேறு; அவர் கொள்கை வேறு என்றும், தேவைப்பட்டால் கொள்கைரீதியாக ரஜினியை எதிர்க்கவும் செய்வேன் என கமல் கூறிவந்தார்.

அரசியலுக்கு வரும் நடிகர்களை தி.மு.க, அ.தி.மு.க என எந்தக் கட்சியும் பாகுபாடு இல்லாமல் எதிர்த்துவருகின்றனர். இந்த நிலையில் நடிகர்கள் ஒன்றாகச் சேர்ந்தால்தான்  50 ஆண்டு காலமாக  தமிழகத்தை ஆட்சிசெய்த கட்சிகளை எதிர்த்து அரசியல் செய்ய முடியும். இங்கு பொறுப்பாளர்களுக்கு இடையே நடந்த இந்த ஆச்சர்யமான நட்பு, நடிகர்களுக்குள்ளும் அரசியலில் இருக்க வேண்டும், தொடர வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் ஊறிப்போன கட்சிகளை எதிர்த்து வெற்றிக்கான அரசியல் முடியும்'' என்றார்கள்.

தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாதது தஞ்சாவூரில் பல வருடங்களாக நடந்துவருகிறது. நடிகர்களுக்குள் பாகுபாடு இருந்தாலும் நிர்வாகிகளுக்குள்ளோ, ரசிகர்களுக்குள்ளோ எந்தப் பாகுபாடும் இங்கு இருந்தது இல்லை.எந்தத் தலைவர் படம் வந்தாலும் எல்லோரும் ஒண்ணா நின்னுதான் முதல் நாள் கொண்டாடுவோம். தமிழகத்திற்கான மாற்று அரசியல் தஞ்சாவூரில் இருந்துதான் பல முறை  நடந்துள்ளது. அது போல இப்போதும் நடக்கும்; அதுவும் இங்கிருந்தே ஆரம்பிக்கும். நாங்கள் ஒன்றாக இருப்பதுபோல ரஜினியும் கமலும் ஒன்றாக இருப்பார்கள், இணைவார்கள் இது நிச்சயம் நடக்கும் என்றனர்.

மேலும் சிலரோ, படத்திற்காக வேண்டுமானால் எல்லோரும் இணையலாம். அரசியல் என்பது வேறு ரஜினியும் கமலும் ஒருபோதும் ஒன்றாக இணைந்து அரசியல் செய்ய மாட்டார்கள். அதற்கு, அவர்களுடைய கொள்கைகள் நிச்சயம் இடம்கொடுக்காது'' என்றனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!