`ஸ்டெர்லைட் மூடப்பட்டதால் காப்பருக்கு சிரமம்!’ சொல்கிறார் அமைச்சர் தங்கமணி

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தமிழகத்தில் காப்பருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

தங்கமணி

தமிழக சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த மே 29-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்றைய கேள்வி நேரத்தின்போது தி.மு.க உறுப்பினர் கே.பி.பி.சாமி, திருவொற்றியூர் பகுதியில் ஒரு பறவை அமர்ந்தாலே மின்மாற்றி அருந்து விடுவதாகவும் மேலும், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வெட்டு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தன்னிடம் புகார் தெரிவிக்கிறார்கள். இதைச் சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா எனக் கேள்வி எழுப்பினார். 

இதற்குப் பதிலளித்த தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் இதுவரை 1,66,000 தாழ்வான மின்கம்பங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தாழ்வான மின்கம்பங்கள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் தகவல் தெரிவித்தால் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருவொற்றியூர் பகுதியில் மெட்ரோ வேலைகள், நெடுஞ்சாலைத்துறைப் பணிகள் போன்றவற்றால் மின் வெட்டு ஏற்படுகிறது, மேலும், மின்மாற்றிகளுக்குத் தேவைப்படும் காப்பர்களை இதுவரை ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து பெறப்பட்டு வந்தது. தற்போது அந்த ஆலை மூடப்பட்டதால் காப்பர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்தக் காரணத்தால்தான் மின்மாற்றிகளைச் சரி செய்ய கால தாமதமாகிறது. இருப்பினும் வேறு இடங்களிலிருந்து காப்பர் பெறப்பட்டு மின்மாற்றிகளைச் சரி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது'' என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!