காவிரிக்காக ஜெயலலிதா உண்ணாவிரதம்... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் -18

காவிரி கடந்து வந்த பாதை குறித்து தொடர் கட்டுரை...

காவிரிக்காக ஜெயலலிதா உண்ணாவிரதம்... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் -18

காவிரி நதிநீர்ப் பிரச்னை தொடர்பாக மாநிலங்களுக்குள் தீர்ப்பாயம் அமைப்பது குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்தது. ஆனால், அந்தக் கோரிக்கையைப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி ஏற்கவில்லை. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்தியாவிலும், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பிரதமராக மொரார்ஜி தேசாய் பதவியேற்றார். தமிழகத்தில் எம்.ஜி.ஆர். முதல்வராகப் பதவியேற்றார். அவர் ஆட்சியிலும், காவிரி விவகாரம் குறித்து பேசப்பட்டது. அவரும், அப்போதைய கர்நாடக மாநில முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அதிலும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் மீண்டும் இந்திரா காந்தி பிரதமராக, காவிரி குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியது. 

காவிரி

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

மீண்டும் பேச்சுவார்த்தை!

1980-ம் ஆண்டு தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரும், கர்நாடக முதல்வர் குண்டு ராவும் பேச்சுவார்த்தை நடத்தினர். எப்போதும்போல அதுவும் தோல்வியில் முடிந்தது. இறுதியில், பெரிய எதிர்பார்ப்புடன் எம்.ஜி.ஆரும், குண்டு ராவும் 1981- ம் ஆண்டு அக்டோபர் 14- ம் தேதி சந்தித்துப் பேசினர். ஆனால், அதுவும் தோல்வியிலேயே முடிந்தது. இடையிடையே காலங்கள் உருண்டோடிய போதும், மத்தியிலும், மாநிலங்களிலும் காவிரிக்கான பிரச்னைக்கு மட்டும் நிரந்தரத் தீர்வு ஏற்படவில்லை. கர்நாடகாவில் புதிய முதல்வரான ராமகிருஷ்ண ஹெக்டேவிடமும் தமிழகத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அதிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து, மீண்டும் தீர்ப்பாயப் பிரச்னையைக் கையிலெடுத்தது தமிழக அரசு. இந்தக் காலகட்டத்தில்தான் மன்னார்குடி ரங்கநாதனும் தீர்ப்பாயம் வேண்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

காவிரித் தீர்ப்பாயம்!

இடைப்பட்ட காலத்தில்தான் எம்.ஜி.ஆரின் மரணமும், அவருக்குப் பின் வந்த ஜானகி ஆட்சியின் கலைப்பும் நிகழ்ந்தேறின. என்றாலும் காவிரி சம்பந்தமாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் எந்தப் பலனுமில்லை. இதில், குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தபோதும் காவிரிப் பிரச்னை சம்பந்தமாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அந்தச் சமயத்தில் நடைபெற்ற தேர்தலில் (1989) தி.மு.க. வெற்றிபெற்று கருணாநிதி மீண்டும் தமிழக முதல்வரானார். இதையடுத்து மீண்டும் காவிரிப் பிரச்னை துளிர்விட ஆரம்பித்ததோடு, ஒருவழியாகத் தீர்ப்பாயமும் அமைக்கப்பட்டது. காவிரித் தீர்ப்பாயம் அமைந்ததை மிகக் கடுமையாக எதிர்த்தது கர்நாடகம். இதுதொடர்பான பிரச்னை ஒருபுறம் வலுத்துக்கொண்டே இருந்தாலும், மறுபுறம் காவிரி குறித்த பிரச்னையைத் தீர்ப்பாயத்திடம் முறையிட்டது தமிழக அரசு. 

காவிரி

அரசிதழில் வெளியிடல்!

இதையடுத்து, காவிரி நதிநீர்த் தீர்ப்பாயம் இடைக்காலத் தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதில், தமிழகத்துக்கு ஆண்டுக்கு, 205 ஆயிரம் மில்லியன் கன அடி (டி.எம்.சி) நீரைக் கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை தமிழகம் வரவேற்றபோதிலும், கர்நாடக அரசு எதிர்ப்பைக் காட்டியது. இதனால், தீர்ப்பாயம் வழங்கிய இடைக்கால தீர்ப்பை அமல்படுத்த எந்தவொரு நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை. இந்தச் சமயத்தில், தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, இடைக்கால உத்தரவை அரசிதழில் வெளியிடச் சொல்லி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். அத்துடன், அனைத்துக் கட்சிகளையும் கூட்டி இதுதொடர்பாகத் தீர்மானங்களையும் நிறைவேற்றினார். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் கர்நாடகம் இதற்கு எதிராகத் தீவிரமாகச் செயல்பட்டு வந்தது. ஆனாலும், 1991- ம் ஆண்டு இடைக்காலத் தீர்ப்பை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டது. 

ஜெயலலிதா உண்ணாவிரதம்!

இது, தமிழ்நாட்டுக்கான வெற்றியாகப் பார்க்கப்பட்டபோதிலும், அதுமுதல் கர்நாடகத்தில் குறிப்பாகப் பெங்களூரில் உள்ள தமிழர்களுக்கு எதிரான கலவரங்களாகவும் மாறி, தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகத்தில் தமிழர்கள் கடும் தாக்குதலுக்கு ஆளாகினர். சிலர் கொல்லப்பட்டனர்; பலர் அகதிகளாக வெளியேற்றப்பட்டனர். பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. இந்தக் கலவரம் இந்திய நாட்டையே உலுக்கியது. ஒருகட்டத்தில், இந்தப் போராட்டத்தால் தமிழகத்துக்குத் தண்ணீர் வராமல் போகவே, இடைக்கால தீர்ப்பை வைத்து மத்திய அரசை வலியுறுத்தியது தமிழக அரசு. அதற்கு மெளனமே பதிலாகக் கிடைத்ததையடுத்து, யாரும் எதிர்பாராத வகையில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார். 

இது என்னோட பிரம்மாஸ்திரம்!

1993-ம் ஆண்டு ஜூலை 18- ம் தேதி காலை சென்னை மெரினாவில் உண்ணாவிரதத்துக்குத் தயாரானார் ஜெயலலிதா. அவர், ``காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை அமல்படுத்தி, தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்'' என்றார் மிகவும் அழுத்தமாக. அடுத்த நிமிடம், அங்கு பத்திரிகையாளர்கள் கூட்டம் குழுமியிருந்தது. அவர்களிடம் பேசிய ஜெயலலிதா, ``காவிரி நீர்ப் பிரச்னையில் நடுவர் மன்ற உத்தரவின்படி கர்நாடக அரசு 205 டி.எம்.சி. நீரைத் தரவேண்டும் என்பதை மத்திய அரசு அமல்படுத்த தவறிவிட்டது. காவிரி நீரைப் பெற்றுத் தருமாறு மத்திய அரசைப் பலமுறை வற்புறுத்தியாகி விட்டது. ஆனால், எந்தவிதப் பலனுமில்லை. அதனால்தான் இந்த உண்ணாவிரதம். கோரிக்கை நிறைவேறும்வரை, காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்" என்றார். ஜெயலலிதாவின் இந்த உண்ணாவிரதத்தால் தமிழ்நாடு அமளிதுமளியானது. பஸ்களும், ரயில்களும் நிறுத்தப்பட்டன; கடையடைப்புக் கலாட்டாக்களும் நடந்தேறின. இந்தப் பரபரப்புக்கிடையில் வி.ஐ.பி-க்கள் பலரும் அவரைச் சந்தித்தனர். அதில், நெடுமாறனும், நெடுஞ்செழியனும் உண்டு. 

ஜெயலலிதா

இடையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜெயலலிதா, "ரெண்டு வருஷம் பொறுத்திருந்தோமே. சொல்லப்போனால், இது என்னோட பிரம்மாஸ்திரம். உங்களுக்குத்தான் தெரியுமே... வேறு வழியே இல்லாம கடைசியிலதான் பிரம்மாஸ்திரத்தைக் கையிலெடுப்பாங்கன்னு'' என்றார். இதற்கிடையே அவரைச் சந்திக்கும் வி.ஐ.பி. படலமும் தொடர்ந்தது. அப்போதைய கவர்னர் சென்னா ரெட்டி ஜெயலலிதாவைச் சந்தித்தார். அவர் நிருபர்களிடம் பேசியபோது, ``முதல்வர் (ஜெயலலிதா) அவருடைய தரப்புக் கருத்துகளைச் சொன்னார். ஆனால், என்னைப் பொறுத்தவரைக்கும் இந்த மாதிரி நடவடிக்கைகளை நான் விரும்புவதில்லை. அவருடைய நலன் கருதி மட்டுமல்ல... மாநிலத்தின் நலன் கருதியாவது, அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும்'' என்றார். ஆனாலும், அவருடைய உண்ணாவிரதம் தொடர்ந்தது. மறுநாள், அவரைக் காண அ.தி.மு.க-வினர் அலைமோதினர். அவர்கள் மட்டுமல்ல; நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, ஒய்.ஜி.மகேந்திரன், ஆர்.எஸ்.மனோகர், முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி என அந்தப் பட்டியல் நீண்டது. 

ஜெயலலிதாவைச் சந்தித்த கமல், ``இன்று மாலைக்குள் உங்களுக்கு நல்ல செய்தி வரவில்லை என்றால், நானும் உங்களோடு வந்து உண்ணாவிரதத்தில் பங்கேற்பேன்'' என்றார். முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் தமிழக அதிகாரிகளிடம், ``எனக்கு இந்தக் காவிரி நதிநீர்ப் பிரச்னை பற்றி முழு விவரங்களையும் அனுப்பிவையுங்கள். நானும் டெல்லியில் பேசுகிறேன்'' என்றார். இந்த நிலையில், ஜெயலலிதாவின் உண்ணாவிரதத்தை நிறுத்துவதற்காக அ.தி.மு.க. எம்.பி. ஜி.சுவாமிநாதன் அவசரமாக டெல்லி சென்றார். இறுதியில் மத்திய அரசின் வாக்குறுதிகளை ஏற்று உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் ஜெயலலிதா. 

காவிரி பாயும்.... 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!