வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (08/06/2018)

கடைசி தொடர்பு:16:30 (08/06/2018)

ஜனாதிபதி மாளிகைக் குடியிருப்பில் மர்மமாக இறந்துகிடந்த ஊழியர்!

குடியரசுத் தலைவர் மாளிகை, பணியாளர் குடியிருப்பில் இறந்த நிலையில் பணியாளார் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மாளிகை

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைப் பணியாளர்கள் குடியிருப்பில் ஏதோ வித்தியாசமான துர்நாற்றம் வருவதாகக்  காவல்துறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அந்தத் தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், அந்தக் குடியிருப்பில் இறந்த நிலையில் இருக்கும் ஒருவரின் உடலைக் கைப்பற்றியுள்ளனர். 

இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், இறந்தவர் குடியரசு தலைவர் மாளிகையில் 5-ம் நிலை பணியாளராக வேலை செய்யும் திரிலோக் சந்த் என்று தெரியவந்துள்ளது. இவருக்கு 50 வயது கடந்த நிலையில் கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்ததாகவும் அவரின் வீட்டில் அனைவரும் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் இவர் திடீரென இறந்துவிட்டதாகவும், இவர் இறந்து மூன்று தினங்களுக்கு மேல் ஆனதால் துர்நாற்றம் வீசுவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவரின் உடல் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிவடைந்த பிறகே அவர் எப்படி இறந்தார் என்பது அதிகாரபூர்வமாகத் தெரியவரும். இறந்தவரின் குடும்பத்தினரை தொடர்புகொள்ள தொடர்ந்து முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.