வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (08/06/2018)

கடைசி தொடர்பு:17:15 (08/06/2018)

பெண்ணிடம் தகராறு செய்த வாலிபருக்கு நடந்த துயரம்!

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே மோட்டார் சைக்கிள் கேட்ட தகராறில் உறவினர் மகனை இளம்பெண் கத்தியால் குத்தியுள்ளார். மேலும், அரசு மருத்துவமனையில் கத்தியை எடுக்க முடியாமல், மேல் சிகிசைக்காக புதுச்சேரி அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கத்தியால் குத்தப்பட்ட வாலிபர்

விருத்தாசலம் அருகே உள்ள ஆலிச்சிக்குடி கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன் என்பவரின் மகன் அன்பரசன் (20). இவரது உறவினர் சக்திவேல் (30). சக்திவேல் நேற்று வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று மாலை அன்பரசன், சக்திவேல் மனைவி பொன்னி(25)யிடம் சென்று சக்திவேல்தான் ஊரில் இல்லையே அவரது மோட்டார் சைக்கிள் வேண்டும். விருத்தாசலம் வரை சென்றுவர எனக் கேட்டுள்ளார். அதற்கு பொன்னி, எனது கணவர் யாரிடமும் மோட்டார் சைக்கிள் தரக் கூடாது எனக் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு ஆத்திரமடைந்த அன்பரசன், பொன்னியை அசிங்கமாக திட்டித் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை பொன்னி தனது தந்தை கிருஷ்ணசாமியிடம் இது குறித்து கூறியுள்ளார். உடனே கிருஷ்ணசாமி, அன்பரசனிடம் சென்று, எனது மகளை ஏன் அடித்தாய் எனக் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் பொன்னி பின்புறமாக அன்பரசன் இடுப்பில் கத்தியால் குத்தியுள்ளார். கத்தி அன்பரசன் இடுப்பில் ஆழமாக இறங்கியுள்ளது. இதனால் அன்பரசன் அலறித் துடித்துள்ளார். உடன் அருகில் இருந்தவர்கள் அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் கத்தியை அகற்ற முயன்றபோது எடுக்க முடியவில்லை பின்னர், அன்பரசனை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.