`மின் மோட்டார் இயங்கும்... ஆனா, தண்ணீர் இல்லையே!' - முதல்வருக்கு எதிராகப் பொங்கும் டெல்டா விவசாயிகள்

Delta Farmers

டெல்டா மாவட்டங்களில் காவிரித் தண்ணீர் இல்லாமல் மூன்றில் ஒருபங்கு விளைநிலங்களில் மட்டுமே நிலத்தடி நீரை ஆதாரமாகக் கொண்டு கடந்த ஏப்ரல் மாதம், குறுவை சாகுபடிப் பணிகளை விவசாயிகள் ஆரம்பித்தார்கள். தற்போது பயிர்கள் வளர்ந்து 60 நாள்களுக்கு மேலான நிலையில் நீரின்றி காய்ந்து கருகிவிடுமோ என்று கவலை அடைந்துள்ளனர் விவசாயிகள்.  

வறண்டு கிடக்கும் கால்வாய்- விவசாயிகள் கவலை


நாகை மாவட்டம், மயிலாடுதுறையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்குநாள் குறைந்துகொண்டே போகிறது. இதனால் மின்மோட்டார்கள் அடிக்கடி பழுதாகி அவற்றை சரிசெய்து பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர்.  காவிரி நீர் மற்றும் மழை நீர் கடந்த சில ஆண்டுகளாக ஏமாற்றம் தந்ததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து படுபாதாளத்துக்குப் போய்விட்டது. காவிரி நீருக்காகப் போராடித் துவண்டுபோன விவசாயிகளுக்கு இயற்கையும் கைகொடுக்காததால் நடவு செய்த குறுவை சாகுபடி கேள்விக்குறியாகிவிட்டது.

எனவே, இந்த ஆண்டாவது ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டு தண்ணீர் வரும் என்று விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்துள்ள அறிவிப்பு விவசாயிகள் தலையில் இடிவிழுந்தாற்போல் ஆகிவிட்டது. ''மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால் எதிர்வரும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர்த் திறக்க இயலாது. அதை ஈடுசெய்ய டெல்டா பகுதி விவசாயிகளுக்கு ரூ.22 கோடியில் சூரிய சக்தியில் இயங்கும் 500 மோட்டார் பம்புகள் வழங்கப்படும். இதற்கு 90 சதவிகிதம் மானியம் வழங்கப்படும்’ என்று அறிவித்திருக்கிறார்.  

முதல்வரின் இந்த அறிவிப்பு குறித்து விவசாயிகளிடம் பேசியபோது, ''வானத்திலிருந்து வரும் சூரிய ஒளியில் மின் மோட்டார்கள் இயங்கும். ஆனால், பூமிக்கு அடியில் தண்ணீர் இல்லையே. மணல் கயிறாகுமா, வெறும் மோட்டார் தண்ணீர் பாய்ச்சுமா’ என்று வேதனை தெரிவித்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!