வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (08/06/2018)

கடைசி தொடர்பு:17:25 (08/06/2018)

`ஜூன் 12-ல் மேட்டூர் அணையைத் திறக்க வாய்ப்பில்லை!' - முதல்வர் பழனிசாமி கைவிரிப்பு

குறுவை சாகுபடிக்கு, வரும் 12-ம் தேதி மேட்டூர் அணையைத் திறக்க முடியாது எனச் சட்டப்பேரவையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

''குறுவை சாகுபடிக்கு, வரும் 12-ம் தேதி மேட்டூர் அணையைத் திறக்க முடியாது'' எனச் சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

முதல்வர் பழனிசாமி


சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றையக் கேள்வி நேரத்தையடுத்து குறுவை நெல் சாகுபடிக்கான தொகுப்புத் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின்கீழ் அறிவித்தார். முன்னதாக மேட்டூர் நீர் திறப்பு குறித்துப் பேசிய அவர், ஆண்டுதோறும் டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி நீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு மேட்டூர் அணையின் நீர் இருப்பு 39 அடியாக இருப்பதால் குறுவை சாகுபடிக்கு நீர் திறக்க முடியாத சூழல் உள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் காவிரியிலிருந்து கிடைக்கப்பட வேண்டிய நீர் தற்போது வரை வரவில்லை. காவிரி நீரைப் பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார். கடந்தகாலங்களைப்போல நிலத்தடி நீரைக் கொண்டு விவசாயிகள் `அதிக நெல்சாகுபடி' செய்ய வேண்டும் என முதல்வர் பேரவையில் தெரிவித்தார். முதல்வரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தி.மு.க உறுப்பினர்கள் இல்லாத அவையில் பேசிய எடப்பாடி, தி.மு.க ஆட்சிக்காலத்தில் குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் நீர் திறந்ததே கிடையாது எனக் கூறி பட்டியலை வாசித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பால் டெல்டா விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.