வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (08/06/2018)

கடைசி தொடர்பு:18:40 (08/06/2018)

`சமகால வரலாற்றில் முக்கியமான நிகழ்வு!’ பிரணாப் முகர்ஜியைப் புகழும் அத்வானி

ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டது நாட்டின் சமகால வரலாற்றில் முக்கியமான நிகழ்வு எனப் பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பாராட்டியுள்ளார்.  

பிரணாப் முகர்ஜி

நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறைப்புரையாற்றினார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அழைப்பை ஏற்றுக்கொண்டது முதலே பிரணாப் முகர்ஜிக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. விமர்சனங்களைக் கடந்து நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பிரணாப் முகர்ஜி, தேசியவாதம், தேசியம் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் குறித்து பேசினார். மதரீதியான வேறுபாடு, வெறுப்பு உணர்வு ஆகியவை நாட்டின் ஒற்றுமையைச் சிதைத்துவிடும் என்று குறிப்பிட்ட பிரணாப், வேற்றுமையில் ஒற்றுமை காணுவதே நமது நாட்டின் சிறப்பு என்று பேசினார். அவரது பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

இந்தநிலையில், ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரணாப் முகர்ஜியைப் பா.ஜ.க-வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பாராட்டியுள்ளார். `இந்த நிகழ்வு நாட்டின் சமகால வரலாற்றில் முக்கியமான நிகழ்வு’ என அத்வானி குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் பல ஆண்டுகளாக இருந்த பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அழைப்பை ஏற்றுக்கொண்டதை வரவேற்பதாகக் கருத்து தெரிவித்துள்ள அத்வானி, அந்த நிகழ்ச்சியின்போது இருவரும் இசைவு மற்றும் அதிர்வு உள்ளிட்ட மாறுபட்ட கோணங்களில் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இதன்மூலம் பிரணாப் முகர்ஜி மற்றும் மோகன் பகவத் ஆகியோர் கருத்துகளால் முரண்பட்டு நிற்பவர்கள் இடையிலான தத்துவார்த்த உரையாடலைத் தொடங்கி வைத்துள்ளனர். இது, பாராட்டத்தக்க ஒரு முன்மாதிரியான நிகழ்வு என்றும் அத்வானி புகழ்ந்துள்ளார். அவர்கள் இருவரும் நாட்டின் பன்முகத்தன்மை உள்ளிட்ட அனைத்துவிதமான வேறுபாடுகளையும் மதிக்கும் மற்றும் ஏற்றுக்கொள்ளும் தேச ஒற்றுமையின் தேவையை வலியுறுத்தியதாகவும் அத்வானி தெரிவித்திருக்கிறார்.