வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (08/06/2018)

கடைசி தொடர்பு:19:00 (08/06/2018)

அதிகாரியின் இல்லத் திருமண நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட அரசு கார் - சிறைபிடித்த ஓய்வு ஊழியர்!

நாகர்கோவில் அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலக காரை உயர் அதிகாரி ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்குப் பயன்படுத்தியதாகக் கூறி ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர் ஒருவர் தன்னந்தனியாகக் காரை சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாகர்கோவில் அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகக் காரை உயர் அதிகாரி ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்குப் பயன்படுத்தியதாகக் கூறி ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர் ஒருவர் தன்னந்தனியாகக் காரை சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

காரை சிறைபிடித்த ஓய்வு ஊழியர்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகச் செயலரிடம் நாகர்கோவிலைச் சேர்ந்த ஒருவர் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். அந்த உதவியாளரின் வீட்டில் வரும் ஞாயிற்றுக்கிழமை திருமண விழா நடக்க உள்ளது. திருமண நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டுக்காக நாகர்கோவில் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான அம்பாசிடர் கார் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. போக்குவரத்துக் கழக செயலாளரின் உதவியாளர் வீட்டுக்கு அரசு கார் அடிக்கடிச் சென்று வந்திருக்கிறது. இதையடுத்து குமரன்புதூர் பகுதியில் திருமண வீடு முன்பு நின்ற அரசு காரை அ.தி.மு.க தொழிற்சங்க முன்னாள் நிர்வாகி ராஜேந்திரன் என்பவர் இன்று மடக்கிப்பிடித்தார். பின்னர், காரின் முன்பு அமர்ந்து சிறைபிடித்து போராட்டம் நடத்தினார். கார் டிரைவர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சிறைபிடிக்கும் போராட்டத்தைக் கைவிட்டார்.

அரசு கார்

இதுகுறித்து ராஜேந்திரன் கூறுகையில், "அரசுப் போக்குவரத்துக் கழக செயலரின் உதவியாளர் திருமணத்துக்காக நாகர்கோவில் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான காரைப் பயன்படுத்துகிறார்கள். அரசு கார், அரசு பணத்தில் டீசல் போட்டு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், சாதாரண பணியாளர்கள் சிறு தவறு செய்தாலும் போக்குவரத்துக் கழக அதிகாரி 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கிறார்கள்" என்றார்.

அரசு கார்

இதுகுறித்து நாகர்கோவில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பொது மேலாளர் திருவம்பலம்பிள்ளையிடம் பேசினோம், "அரசுப் போக்குவரத்துக் கழகச் செயலாளரின் உதவியாளர் இல்லத் திருமண விழா வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. திருமணத்துக்குச் செல்ல வேண்டியிருப்பதால் வீடு எங்கிருக்கிறது எனப் பார்க்க டிரைவர் காரில் சென்றிருக்கிறார். ஆனால், போக்குவரத்துக் கழக முன்னாள் ஊழியரான ராஜேந்திரன் காரைப் பின்தொடர்ந்து சென்று வேண்டுமென்றே இப்படி செய்திருக்கிறார்" என்றார். அரசு கார் அதிகாரியின் திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டுக்காகப் பயன்படுத்துவதாகக் கூறி சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.