`எங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும்’ - குமாரசாமி ஆட்சியைக் கலங்கடிக்கும் 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்

கர்நாடகாவில் அமைச்சர் பதவி கிடைக்காத காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த 9 எம்.எல்.ஏ-க்கள், தற்போது அமைச்சர் பதவி கேட்டு போர்க்கொடி உயர்த்தியுள்ளதால், கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி தப்புமா... என்ற பரபரப்பான அரசியல் சூழல் அங்கு உருவாகியுள்ளது.

கர்நாடகாவில் தேர்தலுக்குப் பிறகு உருவான காங்கிரஸ் - ஜே.டி.எஸ் கூட்டணியில் குமாரசாமிக்கு முதல்வர் பதவி என்றும் துணை முதல்வர் பதவி காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பரமேஸ்வருக்கு என்றும் கூட்டணி முடிவானது. அதன்படி கடந்த மாதம் மே 23-ம் தேதி குமாரசாமி கர்நாடகாவின் முதல்வராகவும் பரமேஸ்வர் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். அதேபோல அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 22, ஜே.டி.எஸ்-க்கு12 என அமைச்சரவை பங்கீடு செய்துகொள்ளப்பட்டது. ஆனால், நிதித்துறை மற்றும் பொதுப்பணித்துறை உள்ளிட்ட முக்கிய அமைச்சரவை இலாகாக்களை ஒதுக்கீடு செய்வதில் காங்கிரஸ் ஜே.டி.எஸ்-க்குப் பெரும் பிரச்னை நீடித்து வந்தது. இதனால் அமைச்சரவை பதவியேற்பு தள்ளிப்போனது. இதன் பிறகு, ஜூன் 6-ம் தேதி இலாகா ஒதுக்கீடு செய்யாமல் காங்கிரஸ் தரப்பில்
15 பேரும் ஜே.டி.எஸ் தரப்பில் 10 பேரும் இலாகா ஒதுக்கீடு செய்யாத அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். 

குமாரசாமி - எம்.பி.பாட்டீல்

ஆனால், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சர்களாக இருந்து தற்போது அமைச்சர் பதவி கிடைக்காத எம்.பி.பாட்டீல், எச்.கே.பாட்டீல், சத்தீஸ் ஜார்கி ஒலி, ரோசன் பேக், ராமலிங்க ரெட்டி ஆகிய எம்.எல்.ஏ-க்கள் தலைமையில் அதிருப்தி முன்னாள் அமைச்சர்கள் எம்.பி.பாட்டீல் வீட்டில் தொடர்ந்து போர்க்கொடி உயர்த்தி ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதே சமயத்தில் எம்.பி.பாட்டீல் வீட்டில் அதிருப்தி அடைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள், சுயேச்சை எம்.எல்.ஏ நாகேஷ் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக ஒன்று சேர்ந்து வருகின்றனர். அதேபோல முன்னாள் அமைச்சர்களான எம்.கிருஷ்ணப்பா, எச்.எம்.ரேவண்ணா, சாமனூர் சிவசங்கரப்பா, ஈஸ்வர கண்டே ஆகியோரும் அதிருப்தி அடைந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

மொட்டை அடிக்கும் ஆதரவாளர்கள்

அமைச்சர் பதவி கிடைக்காத முன்னாள் அமைச்சர்களின் ஆதரவாளர்கள் பலரும் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பாக குவிந்து மொட்டை அடிக்கும் ஆர்ப்பாட்டம், தற்கொலைப் போராட்டம் என்று பெரும் ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் அடிதடி நடத்திக் கலைத்தனர். தகவல் அறிந்த குமாரசாமி எம்.பி.பாட்டீலைச் சந்தித்து சமாதானம் செய்ய அவரது வீட்டுக்குச் சென்றார். ஆனால், 5 நிமிடங்களிலேயே வெளியே வந்த குமாரசாமி, `எம்.பி.பாட்டீலை சமாதானம் செய்ய நான் இங்கு வரவில்லை. அது அவர்கள் கட்சிப் பிரச்னை. நான் கர்நாடக அரசியல் குறித்து விவாதிக்கவே வந்தேன்' எனத் தெரிவித்துவிட்டுச் சென்றார். ஆனால், எம்.பி.பாட்டீல் தலைமையிலான முன்னாள் அமைச்சர்கள் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளனர். இவர்களின் போர்க்கொடியால் குமாரசாமி பதவி தப்புமா... என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. 

தற்கொலை மிரட்டல்

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர், பொதுச் செயலாளர் வேணுகோபால் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களிடம், இது இறுதி அமைச்சரவை கிடையாது. 6 மாதத்துக்கு ஒருமுறை அமைச்சரவை சுழற்சி முறையில் மாற்றி அமைக்கப்படும். இதில் இதுவரை அமைச்சராகப் பதவி வகிக்காத எம்.எல்.ஏ ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் எனக் கூறி அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை சமாதானம் செய்து வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!