ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாலபாரதி கோரிக்கை

``ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அரசாணை வெளியிட்டு சீல் வைக்கப்பட்டிருந்தாலும்,  நிரந்தரமாக இழுத்து மூடிடும் வகையில் சட்டரீதியான நடவடிக்கைளைத் தமிழக அரசு துரிதமாக எடுக்க வேண்டும்" என சி.பி.எம் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி தெரிவித்துள்ளார்.

பாலபாரதி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள வ.உ.சி.அரசு மேல்நிலைபள்ளியில் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 3 புதிய வகுப்பு அறை கட்டப்படவுள்ளது. இதற்கான பூமி பூஜை மற்றும் பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பாலபாரதி, "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானதின் எதிரொலியாகவும் மக்களின் கடும் எதிர்ப்பாலும் அரசாணை வெளியிடப்பட்டு, ஸ்டெர்லைட் ஆலைக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. 'ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுவிட்டது. இனி யாராலும் திறக்க முடியாது' எனச் சட்டசபையில் பேசுகிறார் முதல்வர். இந்த மக்கள் 99 நாள்களாகத் தொடர் போராட்டம் நடத்தியபோது மக்கள் என்ன சொல்கிறார்கள், அவர்களின் பிரச்னைகள் என்ன என்பதைக் கேட்காதது ஏன். அவ்வாறு கேட்கப்பட்டிருந்தால் இன்று 13 பேரின் உயிர்ப் பலி ஏற்பட்டிருக்காது. சட்டரீதியாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூடுவதற்கான நடவடிக்கைளை அரசுத் துரிதமாக எடுக்க வேண்டும். 

பாலபாரதி

நீட் தேர்வால் இதுவரை 3 மாணவிகள் உயிரிழந்துள்ளனர். இனி, தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் நீட் தேர்வை அமல்படுத்த கூடாது என்ற புதிய நிலைப்பாட்டை, அ.தி.மு.க அரசு எடுக்க வேண்டும். இந்தியாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில்தான் அதிகளவில் உள்ளன. தற்போது நீட் தேர்வு மூலமாக மருத்துவக் கல்லூரி இடங்களை வடமாநில மாணவர்களைக் கொண்டுதான் நிரப்பிக்கொண்டு இருக்கின்றனர். மாநிலப் பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி உச்ச மதிப்பெண் பெறும்போது, டெல்லி நடத்திய தேர்வில் மதிப்பெண் குறைந்துள்ளதாகக் கூறி மருத்துவப் படிப்பை மறுப்பது எப்படி சரியாக இருக்க முடியும்? தமிழகத்தில் 13 லட்சம் ஏக்கர் நிலங்களில் விவசாயம் உற்பத்தி செய்யாமல் நிலம் பாழ்பட்டுக்கிடக்கிறது. இந்தச் சூழலிலும் காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதைத்தான் பா.ஜ.க அரசு தனது முதல் லட்சியமாக வைத்துள்ளது. இதற்கு மாநில அ.தி.மு.க அரசும் ஆதரவு அளிக்கிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு மற்றும் தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளால் ஏற்படும் பிரச்னைகள் குறித்த விளக்கத்தை அரசியல் பிரசாரமாக மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!