`வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கைக் கொடுங்கள்!’ - விளையாட்டு வீரர்களுக்கு உத்தரவிட்ட ஹரியானா அரசு

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தங்கள் ஊதியத்தில் 3-ல் ஒரு பங்கை வழங்க வேண்டும் என அம்மாநில அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தங்கள் ஊதியத்தில் 3-ல் ஒரு பங்கை அரசுக்கு வழங்க வேண்டும் என அம்மாநில அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஹரியானா


ஹரியானா மாநில அரசு சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி ஹரியானா மாநில அரசு சார்பில் விளையாட்டுப் போட்டிகளில் விளையாடும் வீரர்கள், விளம்பரங்களில் நடிக்கும் வீரர்கள் தங்கள் ஊதியத்தின் 3-ல் ஒரு பங்கை மாநில விளையாட்டு கவுன்சிலிடம் ஒப்படைக்க வேண்டும். இது மாநிலத்தின் விளையாட்டு மேம்பாட்டுக்குப் பயன்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு விளையாட்டு வீரர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே விளையாட்டு போட்டிக்குச் செல்லும் வீரர்கள் தாங்கள் பணிபுரியும் அலுவலகத்திலிருந்து சம்பளத்துடன்கூடிய விடுமுறையைப் பெற்றுக்கொள்ளலாம் எனச் சலுகை வழங்கியுள்ளது. இந்தச் சலுகையைத் தொடர்ந்து அதிர்ச்சியையும் சேர்த்தே அரசு வெளியிட்டுள்ளது. மேற்கண்ட சலுகையைப் பயன்படுத்தி விளையாடும் வீரர்கள் தங்கள் விளையாட்டின் மூலம் கிடைக்கும் பணம் முழுவதையும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற அதிரடியையும் இணைத்தே அறிவித்துள்ளது. இதனால் அம்மாநில விளையாட்டு வீரர்கள் அரசின்மீது அதிருப்தியில் உள்ளனர். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மல்யுத்த வீராங்கனை பபிதா போகட் விளையாட்டுக்காக நாங்கள் மேற்கொள்ளும் பயிற்சியின் வலி குறித்து அரசு அறியுமா? எங்கள் பணத்தில் மூன்றில் ஒரு பங்கைக் கேட்பதை எப்படி ஏற்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அரசு எங்களிடம் ஆலோசனை நடத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். விளையாட்டு வீரர் சுஷில் குமார் கூறுகையில், இது போன்ற முடிவுகள் வீரர்களின் மதிப்பைச் சீர்குலைக்கும் வகையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!