`நீட் பயிற்சிக்கு தமிழக அரசு செய்த செலவு எவ்வளவு தெரியுமா?’ அம்பலப்படுத்திய ஆர்.டி.ஐ

 நீட்

தமிழக அரசு நடத்திய நீட் பயிற்சியின்போது எவ்வளவு செலவளிக்கப்பட்டது என்ற விவரம் ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்துள்ளது. 

 நீட் தேர்வு என்ற வார்த்தையைக் கேட்டாலே தமிழகத்தில் ஒருவித பதற்றம் தொற்றிக்கொள்ளும் சூழல் உள்ளது. இதற்கு மாணவி அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ என அடுத்தடுத்து மாணவிகளின் மரணமே காரணம். ப்ளஸ் டூவில் நல்ல மதிப்பெண் பெற்றியிருந்தாலும் நீட் தேர்வில் தகுதி பெறாமல் மருத்துவக் கனவை பலர் இழந்துள்ளனர். இந்த விரக்தியில்தான் விபரீத முடிவை மாணவ, மாணவிகள் எடுத்து வருகின்றனர். நீட் தேர்வை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ள அரசு சார்பில் இலவச பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதற்காக நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதி எந்த வகையில் செலவழிக்கப்பட்டது என்பதை ஆர்.டி.ஐ மூலம் தகவலைப் பெற்றுள்ளார் நெல்லை வழக்கறிஞர் பிரம்மா. 

இவர், அரசின் நீட் தேர்வுப் பயிற்சி குறித்து நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன்படி கடந்த 27.4.2018-ல் சில கேள்விகளைக் கேட்டிருந்தார். அதற்கு, ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும் சங்கரன்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும் பதில் அனுப்பியுள்ளனர். அதில், நீட் பயிற்சிக்கு அரசு அனுமதித்த தொகை ரூ.2,24,800 என்றும் அதில் ஆசிரியர்களின் ஊதியமாக ரூ.58,800-ம். மோடம், ப்ரோஜெக்ட்டர், கம்ப்யூட்டர், மைக், ஸ்கிரீன் உள்ளிட்டவை வாங்கியதற்கான செலவு ரூ.1,66,000 என்று பதில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், நீட் பயிற்சிக்காக யாரிடமும் நன்கொடை வசூல் செய்யப்படவில்லை என்றும் பதிலளிக்கப்பட்டுள்ளது. 

நீட் பயிற்சியில், பள்ளியில் உள்ள திறமைமிக்க முதுகலை இயற்பியில், வேதியியல், தாவிரவியல், விலங்கியல் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களுக்குத் தினமும் ரூ.350-ம் மூன்று ஆசிரியர்களுக்கு ரூ.1,050-ம் வழங்கப்பட்டன. பயிற்சி முடிந்த பிறகு ஊதியம் வழங்கப்பட்டது. நீட் பயிற்சி வகுப்புகள் 56 நாள்கள் நடந்தன. முதல் 26 நாள்கள் 90 மாணவர்கள் பங்கேற்றனர். ஏப்ரல் 3 முதல் மே 5 வரை 32 நாள்கள் 30 மாணவர்கள் பயிற்சி பெற்றனர். ஏப்ரல் மாதம் 32 நாள்கள் காணொளிக் காட்சி மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. ஸ்பீடு இன்ஸ்டிடியூட் மூலம் ரூ.2,000 மதிப்புள்ள போட்டித் தேர்வுக்கான கையேடு வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு நாளும் காலை 7 மணி முதல் 9 மணி வரை நீட் மாடல் தேர்வு ஸ்பீடு இன்ஸ்டிடியூட் மூலம் வினாக்கள் வழங்கப்பட்டு நடத்தப்பட்டது என்று பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பிரம்மா கூறுகையில்,``நெல்லை மாவட்டத்தில் நெல்லை, தென்காசி, சேரன்மாதேவி என மூன்று கல்வி மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு கல்வி மாவட்டங்களுக்கும் ஓர் இடத்தில் நீட் பயிற்சி மையம் செயல்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளாலும் பயிற்சியைப் பெற முடியாத நிலை உள்ளது. கிராமப்புற மாணவர்களும் பயிற்சியில் பங்கேற்கும் வகையில் அவர்களுக்குத் தங்கும் வசதியை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இல்லையெனில், கிராமப்புறங்களிலும் பயிற்சி மையத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும், அரசு ஒதுக்கிய நிதியை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகச் செலவழித்துள்ளனர். இது முறைகேடுகளுக்கு வழிவகுக்க வாய்ப்புள்ளது. எனவே, வருங்காலங்களில் கண்காணிப்புக் குழு அமைத்து நீட் பயிற்சியை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!