வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (08/06/2018)

கடைசி தொடர்பு:20:23 (08/06/2018)

ஒரு பக்கம் தூய்மை..மறுபக்கம் குப்பை மேடு! - பெயரளவுக்கு நடந்த `உலகப் பெருங்கடல் தின விழா'

 உலகப் பெருங்கடல் தினம் கடைபிடிக்கப்பட்ட நாளில் ராமேஸ்வரம் துறைமுகத்தில் ஒரு புறம் தூய்மைப் பகுதியாகவும், மறுபுறம் குப்பை மேடுகளாகவும் காட்சியளித்தது.

 உலகப் பெருங்கடல் தினம் கடை பிடிக்கப்பட்ட நாளில் ராமேஸ்வரம் துறைமுகத்தில் ஒரு புறம் தூய்மையாகவும், மறுபுறம் குப்பை மேடுகளாகவும் காட்சியளித்தது.

உலக கடல் தினம்

 ஜூன் 8- ம் தேதியை உலகப் பெருங்கடல் தினமாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளது. இந்த நாளில் உலகில் உள்ள பெருங்கடல்கள் அவற்றில் உள்ள உயிரினங்கள் அவற்றால் கிடைக்கும் நன்மைகள் போன்றவற்றை விளக்கியும், அத்தகைய கடல் பகுதிகளைச் சுற்றுச்சூழல் கேட்டிலிருந்து காப்பது குறித்தும் பல்வேறு விழிப்புஉணர்வு நிகழ்வுகள் உலகம் முழுவதும் நடத்தப்படுகின்றன.

உலக கடல் தினம்


ராமேஸ்வரத்தில் தமிழக மீன்துறையின் சார்பில் இன்று உலகப் பெருங்கடல் தினம் கொண்டாடப்பட்டது. ராமேஸ்வரம் துறைமுகப் பகுதியில் நடந்த  இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் நடராஜன் பங்கேற்று கடலில் சுற்றுச் சூழல் மாசு படாமல் இருக்க மீனவர்கள் எவ்வாறு ஒத்துழைக்க வேண்டும் என எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து கடற்கரைப் பகுதிகளில் கிடந்த குப்பைகள், பிளாஸ்டிக், பைஃபர் கழிவுகளை அகற்றினார். மாவட்ட ஆட்சியருடன் ராமேஸ்வரத்தில் உள்ள இந்தியக் கடற்படை கமாண்டர் ஏ.கே.தாஸ், மீன் துறை துணை இயக்குநர் காத்தவராயன், மீனவர் சங்கத் தலைவர்கள் என்.ஜே.போஸ், தேவதாஸ், சேசு,எமரிட் மற்றும் பசுமை ராமேஸ்வரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இணைந்து கடற்கரை பகுதியைத் தூய்மைப்படுத்தினர்.

மாவட்ட ஆட்சியர் தூய்மைப் பணியில் ஈடுபட்ட துறைமுகப் பகுதியின் அருகாமையிலேயே மீனவர்களால் கடலில் கொட்டப்பட்ட கழிவுகள் மலை போல் குவிந்து கிடந்தன. இதனை அப்புறப்படுத்தவோ அல்லது இனிமேலாவது இதுபோன்ற மாசு ஏற்படுத்தும் கழிவுகளை கடற்கரையில் கொட்டாமல் இருக்க மீனவர்கள் முன் வர வேண்டும் என எச்சரிக்கை செய்யப்படவோ இல்லை. இதன் மூலம் பெயரளவுக்கு நடத்தப்பட்ட விழாவாகவே உலகப் பெருங்கடல் தின  விழா நடந்து முடிந்தது.