ஜி.எஸ்.டி ரீஃபண்ட் பெற விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு!


 

மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி ரீஃபண்ட் தொகை திரும்பப் பெற வரும் 14.06.2018 ம் தேதியை கடைசி தேதியாக அறிவித்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக மாவட்ட ஜி.எஸ்.டி அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ``சரக்கு மற்றும் சேவை வரிகள் செயலகம், மாநில வரி அலுவலர்களின் ஒத்துழைப்புடன் 31 மே 2018 முதல் 14 ஜூன் 2018 இடையிலான நாள்களில் `திருப்புத் தொகை அரைத் திங்கள்’ (Refund Fortnight) எனும் இயக்கத்தினை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. சரக்கு மற்றும் சேவை வரிகள் சட்டம் அமல்படுத்தப்பட்டபிறகு, வரி செலுத்துவோர்கள், வரி அமைப்பின் மாற்றம் காரணமாக திரண்ட உள்ளீட்டு வரி வரவு, சுழிய வரி வழங்கல்கள் (ஏற்றுமதி), ஏற்றுமதியாகக் கருதப்பட்டவை மற்றும் மின் தொகை பேரேட்டில் உள்ள அதிகப்படியான தொகை போன்றவற்றுக்கான திருப்புத்தொகை பெற சரக்கு மற்றும் சேவைவரிகள் இணையம் www.gst.gov.in வாயிலாக மின்னணு முறையில் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

வரி செலுத்துவோர் தங்களது வணிகம் சார்ந்த எல்லைக்குட்பட்ட தக்க அலுவலரிடம் GST RFD-O1A எனும் விண்ணப்பப் படிவத்தின் நகலுடன் தொடர்புடைய ஆவணங்களையும் இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டும். தக்க அலுவலர் விண்ணப்பத்தினை பரிசீலனை செய்து அவை முறையாக இருப்பின் வரி செலுத்துவோருக்குத் திருப்புத் தொகைக்கான ஒப்புதல் ஆவணம் வழங்குவார். ஏற்கெனவே, திருப்புத் தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தினைச் சமர்ப்பித்து 30/04/2018 அன்றுவரை நிலுவையில் உள்ள வரி செலுத்துவோர்கள், திருப்புத் தொகை பெறத் தேவையான அத்தியாவசியமான இணைப்புகளை அதற்கான தக்க அலுவலர்களிடம் உடனடியாக சமர்ப்பித்து இந்த `திருப்புத் தொகை அரைத் திங்கள்’ காலத்தில் தங்கள் விண்ணப்பங்களை பரிசீலனைக்கு உள்ளாக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு முதன்மைச் செயலர்/வணிகவரி ஆணையர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க திருச்சிக் கோட்ட இணை ஆணையரால் அனைத்து வரி செலுத்துவோர்களும் தங்களது திருப்புத் தொகை பெறுவதற்கு 14/06/2018- க்குள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!