வெளியிடப்பட்ட நேரம்: 19:52 (08/06/2018)

கடைசி தொடர்பு:19:52 (08/06/2018)

`ரஜினி ரசிகர்களை கைது செய்யுங்கள்'- போலீஸ் கமிஷனரிடம் வீடியோவைக் கொடுத்த சரத்குமார் கட்சி நிர்வாகிகள்

ரஜினி

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரை கடுமையாக விமர்சித்த ரஜினி ரசிகர்களை கைது செய்ய வேண்டும் என அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் எம்.ஏ சேவியர் தலைமையில் நிர்வாகிகள் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தனர். 

இதுகுறித்து எம்.ஏ.சேவியர் கூறுகையில், ``சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமாரை, ரஜினிகாந்த ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ, சமக நிர்வாகிகள் மத்தியில் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில் இரண்டு ரஜினி ரசிகர்களின் முகம் தெரிகிறது. அவர்கள், தகாத வார்த்தைகளால் சரத்குமாரை விமர்சிக்கின்றனர். இதனால், சம்பந்தப்பட்ட ரஜினி ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் கொடுத்துள்ளோம். விரைவில் போலீஸார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம். சரத்குமாரை விமர்சிக்கும் ரஜினி ரசிகர்கள் யார் என்றே எங்களுக்குத் தெரியவில்லை" என்றார். 

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாருடன் ஒரு வீடியோ பதிவையும் சமக நிர்வாகிகள் கொடுத்துள்ளனர். அந்த வீடியோவில், சரத்குமாரை விமர்சிப்பவர்கள் பல தகவல்களை குறிப்பிடுகின்றனர். ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்தும் பேசுகின்றனர். சரத்குமாரை தவிர இன்னும் சில தலைவர்களையும் அவர்கள் விமர்சிக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ச.ம.க நிர்வாகிகள் கொடுத்த வீடியோவை ஆய்வு செய்தபிறகு அதில் பேசியவர்கள் யார் என்று விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர். வீடியோ குறித்து சரத்குமார், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த சரத்குமார், சில முக்கிய விஷயங்கள் குறித்து விவாதித்துள்ளார். இதன்பிறகு, சரத்குமாரை ரஜினி ரசிகர்கள் விமர்சித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.