`காலாவும் ஓட வேண்டும்; காவிரியும் ஓட வேண்டும்!’ - சொல்கிறார் இல.கணேசன்

`காவிரி விவகாரத்தை காலா படத்துடன் சம்பந்தப்படுத்தி பேசுவது தவறு. காலாவும் ஓட வேண்டும்; காவிரியும் ஓட வேண்டும் என பா.ஜ.க மாநிலங்களவை எம்.பி. இல.கணசேன் தெரிவித்துள்ளார்.

இல.கணேசன்

தஞ்சாவூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த பி.ஜே.பியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ``தமிழ்நாட்டில் நீட் தேர்வு தோல்விக்காக இரண்டு மாணவிகள் தற்கொலை செய்துகொண்டது வேதனைக்குரியது. மாணவ சமுதாயம் மட்டுமன்றி ஒட்டுமொத்த மக்களும், இறைவன் கொடுத்த உயிரை அவர்களே மாய்த்துக் கொள்ளுவதற்கு அவர்களுக்கே உரிமை இல்லை. ஒரு தேர்வில் வெற்றி பெறாமல் போவதற்காக மனமுடைந்து போவது தவறு. கணித மேதை ராமானுஜர் ஒரு தேர்வில் தோற்றுப் போனவர். இருப்பினும் இன்று உலகப் புகழ்பெற்றவராகத் திகழ்ந்து வருகிறார். நம்பிக்கையோடு இருந்து எந்தச் சவலையும் எதிர்நோக்க வேண்டும் என்கிற மனநிலமை இளைஞர்களுக்குத் தேவை. தற்கொலை செய்துகொள்ளுவது என்கிற முடிவை எவரும் எடுக்கக் கூடாது.

தூத்துக்குடியில் அமைதி நிலவி வருகிறது. போராட்டத்துக்காகவும், போராட்டத்தைத் துாண்டிவிட்ட அரசியல் தலைவர்களைத் தவிர மற்றவர்கள் போராட்டத்துக்குச் செல்லவில்லை என்பதுதான் உண்மை. இருப்பினும், ஆறுதல் சொல்ல சென்றவர்களைப் பார்த்து, `யார் நீங்க இத்தனை நாளாக எங்கிருந்தீங்க?’ என்று கேள்வி கேட்டது பண்பு அல்ல. போராட்டத்தின்போது தற்செயலாக அவ்வழியாக வந்தவர்கள் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்திருக்கிறார்கள். அப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரணம் வழங்குவது மட்டும் இல்லாமல், அவர்களின் மறுவாழ்வுக்கும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். திட்டமிட்டபடி சமூக விரோதிகள் ஊடுருவியதன் காரணமாகத்தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது எனத் தெரியவருகிறது. அவர்கள்மீது எந்த இரக்கமும் காட்டக் கூடாது. போராட்டத்தை தூண்டி விட்ட தலைவர்கள்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கலை என்பது பொதுவானது, காலா படம் மட்டும் அல்ல எந்தத் தமிழ்ப் படத்தையும் கர்நாடகாவில் தடை செய்ய வேண்டும் என்று சொல்லும் அமைப்புகளை அந்த அரசு ஒடுக்க வேண்டும். அவர்களை ஊக்குவிக்கக் கூடாது. காவிரி விவகாரத்தை காலா படத்துடன் சம்பந்தப்படுத்தி பேசுவது தவறு. காலாவும் ஓட வேண்டும்; காவிரியும் ஓட வேண்டும்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!