வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (08/06/2018)

கடைசி தொடர்பு:21:40 (08/06/2018)

`பொறியியல் படிப்புக்கான சான்றிதழ் சரிபார்ப்பு!’ - அண்ணா பல்கலைக்கழகத்தில் குவியும் மாணவர்கள்

இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வுக்கு 1,59,631 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் சான்றிதழ் சரிபார்ப்புப் பணியைத் தொடங்கியிருக்கிறது அண்ணா பல்கலைக்கழகம். முதல் நாளில், 42 பொறியியல் கலந்தாய்வு உதவி மையத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 20 ஆயிரம் மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு மையத்திலும் நீண்ட க்யூ வரிசையில் சான்றிதழ் சரிபார்ப்புக்காகப் பெற்றோர்களும் மாணவர்களும் காத்திருந்தனர். 

சான்றிதழ் சரிபார்ப்பு பொறியியல் கலந்தாய்வு

பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் மே 3-ம் தேதி முதல் ஜூன் மாதம் 2-ம் தேதி வழங்கப்பட்டது. இதில் 1,59,631 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் எப்போது சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர வேண்டும் என்ற தகவல் குறுச்செய்தியாகவும், மின்னஞ்சலாகவும் அனுப்பப்பட்டது. ஒவ்வொரு மாணவருக்கும் குறிப்பிட்ட நேரத்தில் வர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாலும் இன்று காலை முதலே பொறியியல் கலந்தாய்வு உதவி மையத்தில் பெருமளவில் மாணவர்களும் பெற்றோர்களும் குவிந்திருந்தனர்.

சான்றிதழ் சரிபார்ப்பு பொறியியல் கலந்தாய்வு

சான்றிதழ் சரிபார்ப்புக்காக, மாணவர்களின் விண்ணப்பத்தின் படிவம், பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச் சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரியாக இருந்தால் அதற்கான சான்றுடன் போன்றவற்றின் அசல் சான்றிதழையும், அதன் நகலையும் பொறியியல் கலந்தாய்வு உதவி மையத்துக்கு எடுத்துவர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர். அண்ணா பல்கலைக்கழகப் பணியாளர்கள், மாணவர்களிடம், விண்ணப்பத்தில் வழங்கப்பட்ட விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை  சரிபார்த்தவுடன் கணினியில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட விவரத்தையும் பதிவு செய்தனர். ஏதேனும் சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை என்றால் அதன் விவரத்தைக் குறிப்பிட்ட நாளில் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர்.

பின்பு, மாணவர்களிடம், `விண்ணப்ப பதிவின் பயனாளர் குறியீடு, மின்னஞ்சல் முகவரி, கடவுச்சொல் மற்றும் பதிவு செய்த அலைபேசி எண், மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும் ரகசிய எண்ணையும் பாதுகாப்பேன் என்று உறுதியளிக்கிறேன் என்றும், அதை மற்றவர்களுடன் பகிர்வதினால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி நான் அறிவேன்' என்றும் பெற்றோரும், மாணவரும் உறுதிச்சான்று வழங்க வேண்டும். அதன்பின்பு மாணவர்களுக்குப் பொறியியல் கல்லூரிகள் பற்றிய தகவல் கையேடு வழங்கப்படுகிறது. மேலும், ஆன்லைன் கலந்தாய்வில் கல்லூரியை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து குறும்படத்தையும் திரையிட்டு காண்பிக்கப்படுகிறது.

சான்றிதழ் சரிபார்ப்பு பொறியியல் கலந்தாய்வு

பொறியியல் பிரிவில் விளையாட்டுப் பிரிவில் 500 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த ஒதுக்கீட்டு இடங்களுக்கு 7,004 பேர் விண்ணப்பித்துள்ளனர். முதல் நாளில் விளையாட்டுப் பிரிவுக்கு 700 மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வந்திருந்தனர். 

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜி, ``இன்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராத மாணவர்கள், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் ஜூன் மாதம் 11-ம் தேதி 1.30 மணிக்கு ஊட்டி பொறியியல் கலந்தாய்வு உதவி மையத்திலும், சென்னை அண்ணா பல்கலைக்கழக உதவி மையத்தைத் தேர்ந்தெடுத்தவர்கள் 17-ம் தேதி மதியம் 1-30 மணிக்கும், இதர மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 14-ம் தேதி மதியம் 1.30 மணிக்கும் அந்தந்த மாவட்ட உதவி மையத்தில் சான்றிதழ் சரி பார்ப்புக்குச் சென்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள வேண்டும். எந்த உதவி மையத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வருவது என்பது குறித்து தெளிவான தகவல் வழங்காதவர்களும் இந்தச் சமயத்தில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மையத்தில் கலந்துகொள்ளலாம். 

சான்றிதழ் சரிபார்ப்பு பொறியியல் கலந்தாய்வு

நாளை முதல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க உள்ளது. மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் தேர்வு செய்ய பொறியியல் கலந்தாய்வு உதவி மையத்தில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள வேண்டும். இவர்கள் கலந்தாய்வின்போது மட்டும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வர வேண்டும்" என்றவர், ஆன்லைன் கலந்தாய்வுக்கு எவ்வாறு தயாராகுவது என்பது குறித்தும் விவரித்தார். 

சான்றிதழ் சரிபார்ப்பு பொறியியல் கலந்தாய்வு

``சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்லூரிகள் பற்றிய தகவல் கையேட்டில் பொறியியல் குறித்த அனைத்து விவரங்களும் தொகுக்கப்பட்டுள்ளன. கையேட்டின் இறுதியில் ஆன்லைன் கலந்தாய்வுக்குத் தயாராகும் வகையில் பாடப்பிரிவையும் கல்லூரியையும் தேர்வு செய்வதற்காக மாதிரி படிவத்தை வழங்கியிருக்கிறோம். மாணவர்கள் ஆய்வு செய்து, பாடப்பிரிவையும், கல்லூரியையும் தேர்வு செய்து குறித்து வைத்துக்கொள்ளலாம்" என்றார்.